ஆகஸ்ட் 14, 2018: புனித மேக்ஸ்மில்லியன் கோல்பே
தன் தந்தையின் சித்தத்திற்காகவும், நமது மீட்பிற்காகவும் மட்டுமே தன் வாழ்வை துச்சமென மதித்து அதை இறைவனின் கையில் ஒப்படைக்க முன் வந்த கிறிஸ்துவின் சீடர்கள் நாம் என்பதை நாம் எண்பிக்க வேண்டுமென்றால், நமது வாழ்வில் தன்னலம் என்ற பேச்சிற்கே இடம் இருக்க கூடாது என்று நமக்கு கற்பிக்கும் புனிதர் ஒருவரை நாம் இன்று கொண்டாடுகின்றோம். ஐந்து நாட்களுக்கு முன்னர் நாம் நினைவுகூர்ந்த மற்றொரு போலந்து நாட்டை சார்ந்த புனிதை எடித்து ஸ்டெய்ன் போன்று புனித மேக்சிமில்லியன் கோல்பேவும் 1941ம் ஆண்டு நாசிப்படைகளின் கைதியாக சிறையில் அடைக்கப்பட்டார்.
அவுஸ்விச் என்ற இடத்தில இருந்த கான்செண்ட்ரேஷன் கேம்ப் எனப்படும் அந்த நாசி சிறையில் ஒரு விதிமுறை இருந்தது, யாரவது கைதி தப்பி ஓடினால், உள்ளிருக்கும் கைதிகளில் பத்து பேர் கொல்லப்படுவர் என்று. ஒருமுறை ஒரு கைதி தப்பித்து செல்ல, கொல்லப்படவேண்டிய பத்து பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதில் ஒருவர் தனது மனைவி குழந்தைகளை நினைத்து கதறி அழ ஆரம்பித்தார். வரிசையில் நின்று இதை பார்த்துக்கொண்டிருந்த ஒருவர் முன் வந்து இவருக்கு பதிலாக நான் சாக தயார் என்று கூறினார். படைத்தலைவர் ஏளனமாய் அவரை பார்த்து யார் நீ என, அந்த மனிதர்: நான் ஒரு கத்தோலிக்க குருவானவர், என்று திடமாய் பதில் கூறினார். ஓ கத்தோலிக்க பன்றியா... நீ யாராக இருந்தால் எனக்கென்ன என்று கூறி, கதறிய அந்த மனிதருக்கு பதிலாக இந்த குருவானவரை கொல்லப்படுவதற்கு அனுப்பினார் அந்த படை தலைவர்.
யாரென்றே தெரியாத ஒருவருக்காக, எந்த விதமான எதிர்பார்ப்புமின்றி, தான் ஒரு கிறிஸ்தவன் என்பதனால் மட்டுமே, தான் ஒரு கத்தோலிக்க குருவானவர் என்பதனால் மட்டுமே அடுத்தவருக்காக இறக்க முன்வந்த இந்த புனிதர் இன்றைய தன்னலம் மிகுந்த சூழலில் நமக்கு ஒரு மாபெரும் எடுத்துக்காட்டே!
அடுத்தவருக்காக தன் உயிரை தருவதை காட்டிலும் மேலானதொரு அன்பு வேறொன்றுமில்லை.