மரியாள் எலிசபெத்தம்மாளை சந்தித்த திருவிழா
செப் 3: 14-18a; லூக் 1: 39-56

இன்றைய முதல் வாசகம் இறைவன் நமது மத்தியில் இருக்கிறார் என்றும், நம்மில் களிகூருகிறார் என்றும், நம்மை புதுப்பிக்கிறார் என்றும், நம்மை குறித்து மகிழ்ந்து ஆடி பாடுகிறார் என்றும் கூறுகிறது! நம்மில் களிகூரும் எவரும், நமது மகிழ்ச்சியில் மகிழும் எவரும், நம்மில் அக்கறை கொண்டு நம்மை புதுப்பிக்கும், திருத்தும் எவரும், அடுத்தவரை குறித்து மகிழ்ந்து ஆடிப்பாடும் எவரும் இறைவனின் பிரசன்னத்தை உணரச்செய்கிறார்கள் என்பதை மிக அழகாக விளக்குகிறது இவ்வாசகம்.
மரியன்னையை நோக்கி, என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் என்ன தவம் செய்தேன் என்று வியக்கும் எலிசபெத்தம்மாள், மரியன்னைக்கு அவரிடம் குடிக்கொண்டுள்ள இறைவனின் பிரசன்னத்தை நினைவுறுத்துபவராக மாறுகிறார். என் ஆன்மா இறைவனை ஏற்றி போற்றுகின்றது என்று எலிசபெத்தை கண்டு இறைவனுக்கு மாட்சிப்பாடும் மரியன்னையோ எலிசபெத்தம்மாளுக்கும் அவ்வில்லத்தை சார்ந்த அனைவருக்கும் இறைவனின் பிரசன்னத்தின் அறிகுறியாகிறார்.
இறைவனின் பிரசன்னத்தை உணர்ந்தவர்களாக, உணர்த்துபவர்களாக... கடவுள் நம்மோடு நம்மில் வாழ்கிறார்... கடவுளே நாமாய் வெளிப்படுகிறார் என்று உணர்ந்து வாழ நாம் அழைக்கப்படுகிறோம்... உணர்வோம், வாழ்வோம்!