அடுத்தவரின் உணர்வை புரிந்து அதையே நானும் உணர்வது...
என்னோடு இருப்பவர்கள் என்னை சுற்றி இருப்பவர்கள் என்னை சார்ந்து இருப்பவர்கள் எனக்கு தெரிந்தவர்கள் என யாரானாலும் அவர்கள் என்ன உணர்வோடு இருக்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டு, அவர்களது உள்ளத்தில் இருக்கும் சோகத்தையோ, மகிழ்ச்சியையோ, குழப்பத்தையோ, துன்பத்தையோ, தனிமையையோ, கோபத்தையோ, உற்சாகமின்மையையோ, உணர்ந்து உள்வாங்கி புரிந்து அவர்களின் தேவைக்கு ஏற்றாற்போல உடனிருக்கும் பண்பையே புரிந்துணர்தல் என்கிறோம்.
யாருக்கு என்ன நடந்தால் எனக்கென்ன? என் வாழ்வுண்டு, நானுண்டு என்று நான் வாழ்ந்தால், நான் கிறிஸ்துவின் சீடனாக சீடத்தியாக வாழமுடியுமா? அழுவாரோடு அழவும், மகிழ்வாரோடு மகிழவும் இறைவன் என்னை அழைக்கின்றார். அதற்காக அழிவாரோடு அழியவும் தவறிழைப்பரோடு தவறிழைக்கவும் நாம் அழைக்கபடவில்லை. நமது புரிந்துணர்வு இறைஞானமுள்ளதாய் மாறுவது எப்போதென்றால், மற்றவரின் உணர்வை புரிந்து கொண்டு, அவர்கள் இறைவனின் சித்தப்படி மேன்மையடைய அடுத்து செய்யவேண்டியதற்கு அவர்களை நாம் அழைக்கும்போதே! இதுவும் ஒருவகை புனிதமே.
ஆம். புரிந்துணர்தலும் ஒரு வகை புனிதமே. அடுத்தவரை புரிந்துகொள்வதும், அவர்கள் உணர்வதை உணர்வதும், அவர்களுக்கு நன்மை தரக்கூடியதை உணர்த்துவதும் இறைவனின் கொடையே! இதுவும் புனிதமே!