பெரிய வெள்ளி - 30.03.2018
யாருடைய இறப்பிலும், அவர் எதிரியே ஆனாலும், நாம் மகிழ்ந்து கொண்டாடுவதில்லை. ஆனால் கிறிஸ்துவின் இறப்பு நமக்கு மகிழ்ச்சியை தருகிறது... மட்டில்லா மகிழ்ச்சி, என்றும் அழியா மகிழ்ச்சி! ஏனென்றால் இது அவர் நம்மீது கொண்டிருந்த, கொண்டிருக்கும் அன்பின் வெளிப்பாடாகும்... அந்த அன்பினாலேயே நாம் நாமாக இருக்கிறோம். நமது வாழ்வின், மீட்பின், மகிழ்ச்சியின் காரணம் அந்த அன்பே!
அன்பின் அடையாளம் இதயம் என்பர். சிலுவையை மீறிய அன்பின் அடையாளம் உண்டோ! கடவுள் இவ்வுலகின் மீது எவ்வளவு அன்பு கொண்டார் என்றால் தன் ஒரே மகனையே இவ்வுலகின் மீட்புக்காக அளித்தார். இறைமகன் இவ்வன்பை வெளிப்படுத்த பயன் படுத்திய கருவியே சிலுவை. சிலுவை, பாடுகளின் சின்னம் மட்டுமல்ல, அந்த பாடுகளுக்கு உயிரளித்த அன்பின் சின்னம்.
அந்த அன்பின் சின்னம் சிலுவை பேசும் வார்த்தைகள் ஒவ்வொன்றுமே அன்பின் வெளிப்பாடு...
மன்னிக்கும் அன்பு (லூக் 23:34)
அரவணைக்கும் அன்பு (லூக் 23:43)
தேற்றும் அன்பு (யோ 19:26)
ஏங்கும் அன்பு (யோ 19:28)
இறைவனின் சித்தத்திற்கு அடிபணியும் அன்பு (யோ 19:30)
நம்மையும் இறைவனிடம் சரணாக அழைத்திடும் அன்பு (லூக் 23:46)
இந்த அன்பின் அருளை பெற நீ அப்படி என்ன செய்துவிட்டாய்? நினைத்ததுண்டா? அந்த அன்பினாலே நான் வாழ்கிறேன் என்று உணர்ந்து, அதே அன்பை உன் உள்ளத்திலும் வளர்த்திட நீ தயாரா?