நீதியின் நிமித்தம் பசி தாக்கமுள்ளோர் பேறுபெற்றோர்
இன்று நீதி உரிமை என்று பேசுபவர்கள் உண்மையிலேயே பேறுபெற்றவர்களா... இல்லை அடக்குமுறையின் கவனத்தை பெற்றவர்களா?
எரேமியா நீதிக்காகவும் இறைவனின் செய்திக்காகவும் தன் வாழ்க்கையே கேள்விக்குறியாவதை பற்றி இறைவனிடம் முறையிடுகிறார். இயேசு கிறிஸ்துவின் முன்னோடிகளில் பழைய ஏற்பாட்டில் சரியாக கிறிஸ்துவின் வாழ்க்கையோடும் வாழ்முறையோடும் பொருந்துபவர் என்றால் அதில் எரேமியாவை மிஞ்சமுடியாது. ஆனால் இன்று நாம் காணும் ஒரு கூற்று மட்டும் அவர்களுக்குள்ளே ஒரு வேறுபாடாய் அமைகிறது.
தனக்கு எதிராய் சதி செய்து தன்னை அழிக்க எண்ணும் பாதகர்களை குறித்து இறைவனிடம் முறையிடும் எரேமியா, அவர்கள் அழிவை தான் காணவேண்டும் என்றும், அதன் மூலம் இறைவன் தன்னை அன்புசெய்கிறார் தேர்ந்துகொண்டுள்ளார் என்பதை உணரவேண்டும் என்றும் விரும்புகிறார். ஆனால் கிறிஸ்துவோ, அவர்கள் அழிவையும் விரும்பவில்லை பழிவாங்கவும் செபிக்கவில்லை. மாறாக, அவர்கள் இறைவனின் அன்பை புரிந்துகொள்ள வேண்டும் என்றும் மனம் திருந்தி இறையரசின் மக்களாக வேண்டும் என்றும் செபிக்கிறார்.
கிறிஸ்துவின் மனநிலையை கொண்டவர்களாய், நீதியின் நிமித்தம் அடங்காத பசி தாகம் கொண்டவர்களாவோம், எனினும் இரக்கமும் மன்னிப்பும், இறைவனின் அன்பும் நம் மனங்களை விட்டு அகலாது காப்போம்.
இறைவனுக்காக இன்னலுற தயாராவோம்! இறையரசின் மக்களாய் வளர்வோம்!