அவரிடம் வந்தவர்கள் கண்டனர் தங்கினர்...
யார் இவர்? இவரை குறித்து ஏன் நமது குருவான யோவான் பேச வேண்டும்? இவரிடம் அப்படி என்ன சிறப்பாக உள்ளது? என்ன தான் செய்து வருகிறார்? இன்னும் பலப்பல கேள்விகள் அந்த சீடர்களின் மனதில் தொக்கி நின்றன. எல்லா வினாக்களுக்கும் ஒரே பதிலில் தெளிவளித்தார் இயேசு: வந்து பாருங்கள்.
தன் தனிப்பட்ட வாழ்வை எந்த ஒரு தயக்கமும் இன்றி திறந்த புத்தகமாக வாழ துணிந்தார் கிறிஸ்து. இன்று என்னால் அப்படி பட்ட வாழ்வை வாழ முடியுமா: நீங்கள் யாராக இருந்தாலும் சரி... நான் யாரென்று வந்து பாருங்கள் என்று துணிவோடு என்னால் அழைப்பு விடுக்க முடியுமா? முன்னால் பேசுவது ஒன்று, பின்னால் முனகுவது வேறொன்று; பொதுவில் வாழும் வாழ்க்கை ஒன்று, தனிப்பட்ட உலகம் வேறொன்று; வெளிப்படையாக பேசும் விழுமியங்கள் ஒன்று, உள்ளத்தில் ஊறியுள்ள மதிப்பீடுகள் வேறு என்று நான் வாழ்ந்து கொண்டிருந்தால், துணிவோடு, வந்து பாருங்கள் என்று என்னால் எப்படி சொல்ல இயலும்?
உள்ளும் புறமும், முன்னும் பின்னும், பொதுவிலும் தனிமையிலும், ஒரே வாழ்வியல் விழுமியங்களை கொண்டிருந்தால் கிறிஸ்துவை போலவே நானும் வந்து பாருங்கள் என்று எளிதில் கூற இயலும். அவர் அழைத்தார், வந்தனர், கண்டனர், அவரோடு தங்கினர். இன்று நான் அழைத்தால், வந்து கண்டு கிறிஸ்துவோடு தங்க தயாராய் இருப்பார்களா?