Tuesday, April 3, 2018

உயிர்ப்பின் அழைப்பு: உங்கள் உள்ளங்கள் பற்றி எரியட்டும்

ஏப்ரல் 4: பாஸ்கா எண்கிழமையில் புதன் 

உயிர்த்த கிறிஸ்துவின் உடனிருப்பை அப்போஸ்தலர்களும் சீடர்களும் மட்டுமல்ல, சூழ்ந்திருந்த மக்களும் கூட உணர்ந்தார்கள். அப்போஸ்தலர்களும் சீடர்களும் அவர்கள் உள்ளத்தில் ஒரு நெருப்பு பற்றி எரிவதாய் உணர்ந்தார்கள்... அந்த நெருப்பு அவர்களது உள்ளத்தை ஒளிபெற செய்தது, கதகதப்பூட்டி அவர்களது உறவுகளை புதுப்பித்தது, அவர்களது சொல்லிலும், செயலிலும் துணிச்சலையும் உண்மையையும் ஆழப்படுத்தியது, அவர்களை முற்றிலுமாய் புதுப்பித்தது, அவர்களது வாழ்வுக்கு பொருளளித்து மெருகூட்டியது. ஒருமுறை நாங்கள் வாழ்ந்த இல்லத்திலே துப்புரவு பணியாளர் ஒருவரை நான் கடந்து செல்லும் போது அவர் என்னை பார்த்து புன்னகைத்தவாறே கூறினார்: "நீங்கள் இல்லத்தில் இருக்கிறீர்கள் என்றால் எங்கள் அனைவருக்கும் அது தெரியும்... ஏனெனில் மகிழ்ச்சியும் சிரிப்பொலியும் கண்டிப்பாக இருக்கும்" என்றார். வியந்துபோனேன், இறைவனுக்கு அதிகமாய் நன்றியும் கூறினேன்! 

நாம் உயிர்ப்பின் மக்கள் என்றால் நம்மிலே மகிழ்ச்சியும், உண்மை உறவும், உயிரூட்டும் ஒளியும் மிளிரவேண்டாமா! அப்படியானால் நாம் பிரச்சனைகள் அற்றவர்களாய் இருக்கவேண்டுமா என்ன? இல்லை, இருளின் மத்தியில் ஒளிவீசுபவர்களாய், துன்பங்களின் மத்தியில் பிறருக்கு ஆறுதலளிப்பவர்களாய், பிரச்சனைகளின் மத்தியில் சுற்றியுள்ளோருக்கு திடமளிப்பவர்களாய் நாம் இருக்க வேண்டும் - இதுவே உயிர்ப்பின் அழைப்பு! 

பிரச்சனைகளுக்கும், குழப்பங்களுக்கும் மத்தியில், உறுதியோடும், திடத்தோடும், குறையாத மனத்தெளிவோடும், உறவில் உண்மையோடும், உள்ளத்தில் ஒளியோடும் வாழவேண்டுமானால் நம் மனங்கள் பற்றி எரியவேண்டும்... உயிர்த்த கிறிஸ்துவின் உயிரூட்டும் நெருப்பில் நம் உள்ளங்கள் பற்றியெரிய வேண்டும்.


The Easter Call: To burn within!

Wednesday within the Easter Octave: 4th April, 2018

Acts 3: 1-10; Lk 24: 13-35

The presence of the Risen Lord was felt in a concrete sense by the apostles and those around them. The Risen Lord was there as a fire within them, burning their hearts, warming up their relationships, heating up their commitments and lighting up their understanding. Their lives were touched by the Lord and not merely they, but all those who were around felt that touch. I was pleasantly surprised one day, when one of the cleanliness staff in our campus remarked to me as I was passing him by: 'when you are around, we all sense it. There is so much laughter and cheer!' I could not thank God enough for such an affirmation that day.

Aren't we called to be Easter people, radiating joy, radiating warmth, radiating light! That does not mean we would have no problems or no struggles! They would in fact abound. But that does not matter because we have within us a fire that is alive, burning and igniting every part of our selves - the fire of the Risen Lord. 

I received a message a few days back requesting prayers - the person said her marriage was broken, now she finds herself alone with her child, she cannot go back to her family because she had entered into this marriage against all their wish! Why is God so blind to my problems, she ended the message. I only enquired, if there were no indications when things were beginning to happen or was she negligent of those indications! However, even now she can confront her problems if only she draws strength from that fire that is within her - the presence of the Risen Lord! Can't she?

With that fire burning in our hearts, we can face any situation and find new lease of life within us and share the same with all around us.

உயிர்ப்பின் அழைப்பு: உங்கள் மனங்களை திறந்திடுங்கள்

ஏப்ரல் 3: பாஸ்கா எண்கிழமையில் செவ்வாய் 

"நாங்கள் என்ன செய்யவேண்டும்" என்று தங்கள் உள்ளம் குத்தப்பட்டவர்களாய் இன்று மக்கள் அப்போஸ்தலர்களிடம் வினவுவதை நாம் காண்கின்றோம். இதுவே மனம் மாறிய மக்களின் முதல் அறிகுறி - உள்ளம் குத்தப்பட்டவர்களாய் ஏதாவது செயதேயாகவேண்டும் என்று துடிக்கும் மனநிலை. 

ஒருமுறை, ஆண்டின் தொடக்க வாரத்திலே மறைக்கல்வி ஆசிரியர்களுக்கு ஒரு பயிற்சிப்பட்டறை நடத்தியபோது ஏற்பட்ட மறக்கமுடியாத நினைவு ஒன்று எனக்கு உண்டு. அந்த நாளின் பயிற்சி அனைத்தும் முடிந்தவுடன், ஆசிரியர்கள் களைந்து சென்று கொண்டிருந்தபோது, அவர்களில் ஒருவர் என்னிடம் வந்தார்: "தந்தையே நீங்கள் சொன்னதையெல்லாம் கேட்டுவிட்டு என்னால் வந்தபடியே திரும்பி போக இயலாது. நான் ஏதாவது செய்தேயாகவேண்டும், எனக்கு ஒரு ஆலோசனை கூறுங்களேன்" என்றார். நானும் அவர் செய்யக்கூடியவை பற்றி அவரோடு சிந்திக்க, உடனே என்னோடு தொடர்பில் இருந்த ஒரு மறைபரப்பு குழவிலே உறுப்பினராக இணைந்து ஆர்வமாய் பணியாற்றத் தொடங்கிவிட்டார்! மூன்று வருடங்களாய் அந்த குழுவில் அவர் தன்னார்வ தொண்டராய் பணியாற்றிவருகிறார். இருநூறு ஆசிரியர்கள் அந்த கருத்தரங்கில் பங்குபெற்றிருந்தாலும், இவர் ஒருவருக்கு மட்டுமே உள்ளம் குத்தப்பட்டு ஒரு புது வழி பிறந்தது என்பது எனக்கு மறக்க முடியாத ஒரு நிகழ்வு. 

உயிர்த்த கிறிஸ்துவை நம் உள்ளங்களை தொட நாம் அனுமதித்தோமேயானால் நம்மிலும் பல மாற்றங்களை அவர் நிகழ்த்தக்கூடும். ஆண்டவரே நான் ஏதாவது செய்தேயாகவேண்டும் என்று நாம் கூறினால் உயிர்த்த கிறிஸ்து நம்மை பார்த்து... நான் என் தந்தையிடம் திரும்புகிறேன், நான் தொடங்கிய பணியை நீ தொடர்வாயா -என்று கூறுவது நமக்கு கேட்கும். இதை அப்போஸ்தலர்கள் உணர்ந்தார்கள், தங்கள் வாழ்க்கையையே அதற்காக கையளித்தார்கள். 

நமக்குள்ளாக இந்த கேள்வி அவ்வப்போதாவது எழுந்ததுண்டா? நான் என்ன செய்யவேண்டும்? என்னிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறீர் ஆண்டவரே? என்று உள்ளம் குத்தப்பட்டு இறைவனிடம் கேட்டதுண்டா? 

இறைவனின் உயிர்ப்பு நமக்கு விடுக்கும் அழைப்பு இதுவே: மனங்களை திறங்கள், உள்ளங்கள் குத்தப்பட்டு என்ன செய்வதென்று சிந்தியுங்கள், உங்கள் வாழ்வை முழுமையாய் வாழுங்கள்.