அக்டோபர் 25, 2018: எபேசியர் 3: 14-21; லூக்கா 12: 49-53
நாம் இறைவனின் பிள்ளைகள், அவரது மக்கள்! அன்பே உருவாய், அன்பிற்கெல்லாம் ஊற்றாய் இருக்கும் இறைவனின் உருவை தாங்கிட அவரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் நாம், அவரது அடையாளத்தை நம்மில் கொண்டு வாழ்பவர்கள்! தன் அன்பை கடவுள் நம் உள்ளத்திலே நிரம்ப செய்திருக்கிறார், நிறைவாய் பொழிந்திருக்கிறார். இந்த அன்பு நம் உள்ளத்திலே அவரது கொடையாகவும் அதே நேரத்தில் அவரது அடையாளமாகவும் பொழியப்பட்டுள்ளது என்பதை நாம் உணரவேண்டும்.
இறைவனின் ஆவி எனக்குள் வாழுகிறார் என்பதன் முதன்மையான அடையாளமே இந்த அன்பு தான். என்னை இறைவனின் பிள்ளையாக, கிறிஸ்துவின் சீடனாக சீடத்தியாக, தூய ஆவியின் ஆலயமாக பிரித்து காட்டுவதும் இந்த அன்பே! இரவையும் பகலையும் ஒளி பிரித்துக்காட்டுவது போல இறைவனுக்குரியவர்களையும் மற்றவர்களையும் பிரித்துக்காட்டுவது அன்பே. ஆகையால் தான் கிறிஸ்து இன்று பிரிவினையை குறித்து பேசுகிறார். போட்டியாலும் பொறாமையாலும் நாம் நம்மையே பிரித்துக்கொள்ளும் பிரிவினை அல்ல, மாறாக, அன்பினால், அன்பின் அடையாளத்தால் பிரித்து காட்டப்படும் உண்மையை குறித்து நம்மிடம் பேசுகிறார்.
இறைவனின் அன்பு உடையவர்கள், அந்த அன்பின்றி வாழ்பவர்கள் என்று நாம் பிரித்து காட்டப்படுகிறோம்! உண்மையிலேயே இறைவனின் மக்கள் இந்த அன்பை உடையவர்களாக அடையாளப்படுத்தப் படுவார்கள். இறைவனின் அன்பு எதையும் எதிர்பாராத அன்பு! திரும்ப கிடைக்கும் என்ற எதிர்பார்ப்போ, இன்பம் அளிக்கும் என்ற ஆவலோ, எனக்கு நன்மையாய் அமையும் என்ற எண்ணமோ எதுவுமின்றி செய்யப்படுவதே உண்மை அன்பு! இந்த அன்பு, இறைவனின் இந்த அன்பு, நம்மில் இருந்துவிட்டால் நாம் மகிழ்ச்சியாய் இருப்போம் என்று தவறாக எண்ணிவிட கூடாது. ஏனெனில் இந்த அன்பு இருப்பவர்களாய் நாம் இருக்கும் போது நாம் ஏமாற்றப்படுவோம், ஏளனப்படுத்தப்படுவோம், ஏறி மிதிக்கப்படுவோம்... இருப்பினும் நிலையாய் நிற்பவரே இறுதி வாகையை சூடுவர் (காண்க - யாகப்பர் 1:12).