Wednesday, February 7, 2018

பிப்ரவரி 8: கடவுளையே வியக்கச் செய்பவர்கள்

முற்றிலும் சரணடையும் மனநிலையில் வளர...


பாவத்தின் அதி பயங்கரமானதொரு குணம் என்ன தெரியுமா... கொஞ்சம் கொஞ்சமாய், நமக்கே தெரியாமல் நம்மை தனக்கே அடிமையாக்கிக்கொள்ளும் ஆற்றலே! உடலில் ஏறிய நஞ்சு நம்மை அறியாமலே வலியேதும் இல்லாமலே உடல் முழுவதும் பரவுவது போல, பாவம் நம்மைக் ஆட்கொள்ளுகிறது. ஏதும் உணராமல் இருந்துவிட்டு, திடீரெனெ விழித்து கொள்ளும் போது ஏற்கனவே காலம் கடந்து போனதொரு உணர்வை எத்தனை முறை நாம் பெற்றிருக்கிறோம்! இன்றைய முதல் வாசகத்தில் சாலமோன் பெரும் அனுபவம் இது தான். கொஞ்சம் கொஞ்சமாய் கடவுளின்  செல்லப்பிள்ளை என்ற தனது அடையாளத்தை இழக்கிறார் சாலமோன்...சுதாரித்துக்கொண்ட போது  ஏற்கனவே காலம் கடந்து இருந்தது.

சுருக்கமாய் கூறினால் பாவம் என்பது முரண்டு பிடிப்பது - கடவுளின் சித்தத்திற்கு எதிர்த்து முரண்டு பிடிப்பது. அப்படியானால், அதற்கு தீர்வு என்ன? கடவுளின் பிள்ளைகளாய் அவரிடம் நம்மையே முழுமையாய் சரணாக்குவது, எந்த தயக்கமோ, மாற்றுச் சிந்தனையோ இல்லாமல் நம்மையே முற்றிலுமாய் தாவீதை போல ( 1 அரசர் 11:6) நம்மையே இறைவனின் கரங்களில் சரணாக்குவதே வழி, வேற்றினப்பெண்ணாய் இருந்தும் தன் தாழ்ச்சியாலும் தன்னளிப்பாலும் இயேசுவையே வியக்க வைத்த அந்த தாயை போல, நம்மையே இறைவனின் சித்தத்திற்கு குழந்தைகளை போல சரணாக்கும் போது நாம் உண்மையில் கடவுளின் வியத்தகு பிள்ளைகளாகிறோம். 

இப்பெண்ணே கடவுளை வியக்க செய்த பல புனிதர்களின் முன்னோடியாகிறாள்... பவுலடிகளார், தொடக்க கால மறைசாட்சிகள், பிற்கால புனிதர்களான ஜான் மரிய வியான்னி, மாக்சிமில்லியன் கோல்பே, ஆஸ்கர் ரோமெரோ, ராணி மரியா, என இந்த பட்டியல் நீண்டு கொண்டே போக்கக்கூடியது. நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்று தான். நம்மையே முற்றிலும்  சரணாக்கி இறைவனையே வியக்கச் செய்யும் பிள்ளைகளாவோம்! பெரிது உமது நம்பிக்கை என இறைவன் கூறுவதை கேட்டு மகிழ்வோம்!

1 comment:

simon anandhraj said...

Excellent insight Father...