இறைவனுக்கு சொந்தமானவர்கள் என்பது பெருமையா?
என் தந்தை செயலாற்றுவதால் நானும் செயலாற்றுவேன் என்று இயேசு கூறும் அந்த வார்த்தைகள் அவரது சக யூதர்களை கோபப்படுத்தியது. நீ உன்னையே கடவுளுக்கு நிகரானவனாக அழைத்துக் கொள்கிறாய் என்று அவரை கடிந்துக் கொண்டார்கள். இயேசுவோ நீங்கள் சொல்வது தான் உண்மை, நானும் என் தந்தையும் ஒன்றே என்று கூறுவதோடு, நம்மை பார்த்தும் அதையே கூறுகிறார். உங்கள் விண்ணகத் தந்தையும் தாயுமான இறைவனின் பிள்ளைகள் நீங்கள், அவரது உருவையும் சாயலையும் தாங்கியவர்கள் நீங்கள், அவரை போன்றே வாழ அழைக்கப்பட்டவர்கள். அவருக்கே சொந்தமானவர்கள் - இது வெறும் பெருமை மட்டுமல்ல, பெரும் கடமையும் கூட!
இறைவனை மதியாது விலகி செல்லும் இன்றைய உலகில், இறைவனுக்கு சொந்தமானவர்களாய் வாழ்ந்து அந்த இறைவனின் அன்பை உலகம் உணருமாறு செய்ய வேண்டிய கடமை அது. உங்கள் சொல்லிலும் செயலிலும் இறைவனின் அன்பை முன்னிறுத்தி உங்களை சுற்றி உள்ள அனைவரும் அதை உண்மையாய் உணரும்படி செய்ய அழைக்கப்பட்டவர்கள் நீங்கள். இறைவனின் அன்பு அனைவருக்குமான அன்பு மட்டுமல்ல, ஒவ்வொருவருக்குமான அன்பு.
ஒரு தாய் தன குழந்தையை அன்பு செய்யும் போது அதை எப்படி வெளிப்படுத்துகிறாள்? தன் எல்லா குழந்தைகளுக்கும் ஒரே அன்பா? இல்லை, ஒவ்வொரு குழந்தைக்கும் தேவையான அன்பு. பசியென்று அழும் குழந்தைக்கு உணவாக வெளிப்படும் அன்பு, பயமென்று அழும் குழந்தைக்கு அரவணைப்பில் வெளிப்படும் அன்பு, ஏதோ ஒரு இழப்பினால் அழும் குழந்தைக்கு நானுள்ளவரை நீ எதையும் இழந்துவிடவில்லை என்று ஆறுதலாய் வெளிப்படும் அன்பு... இப்படி ஒருவரின் உண்மையான உள்ள உணர்வை தெரிந்து வெளிப்படும் அன்பே தாயின் அன்பு. அந்த தாயின் அன்பு அற்றுப்போனாலும், நான் உன்னை கைவிடுவதில்லை என்று கூறும் இறைவனின் அன்பு இன்னும் எத்தனை மடங்கு ஆழமானதாய் இருக்கும் என்று சற்று சிந்தித்து பார்ப்போமா!
அவர் கரங்களில் நாம் இருக்கிறோம் என்ற துணிவோடு, அவர் கரங்களில் நம் வாழ்வு இருக்கிறது என்ற மகிழ்வோடு, அவரது அன்பு நமக்கு என்றும் உள்ளது என்ற மனதிடத்தோடு... அவரது பணியை இவ்வுலகில் ஆற்ற நாம் துணிய கிறிஸ்து நம்மை அழைக்கிறார். நாம் எங்கிருந்தாலும், எதை செய்தாலும், அவர் கரங்களில் உள்ளோம் என்பதை மறவாது செயல்படுவோம்!
No comments:
Post a Comment