Friday, November 1, 2013

நம்பினோர் பேறுபெற்றோர்







எட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தான் ஆற்றும் திருப்பலியில் உண்மையிலேயே அப்பம் உடலாகவும், இரசம் இரத்தமாகவும் மாறுகிறதா என்று ஐயம் கொண்டவராகவே திருப்பலியாற்றிய ஒரு துறவியின் கண்ணெதிரே வெண்மையான துண்டாயிருந்த அப்பம் தசையாய் மாறியது; திராட்சை இரசம் இரத்தமாய் மாறியது! இக்காட்சி கண்டு உரைந்துப் போனார் அந்த துறவி... அவருக்கு மட்டுமல்ல அன்று அவராற்றிய திருப்பலியில் பங்கெடுத்த அனைவருக்கும், ஏன் இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் நமக்கும்  ஒரு இயற்கைக்கு அப்பாற்பட்ட சான்றாக இன்றும் நம் கண்முன்னே தோன்றுகிறது அந்த தசையும் குருதியும். இலஞ்ச்யானோ என்று அழைக்கப்படும் இத்தாலியின் இப்பகுதியில், 12 நூற்றாண்டுகளாய் தசையாய், இரத்தமாய் எவ்வித வேதியியல் உதவியும் இன்றி இன்றும் வைக்கப்பட்டிருக்கும் இவை நம் நம்பிக்கையை ஆழப்படுத்துகின்றன, அதன் அசைக்க முடியா அடித்தளங்களை நினைவுப்படுத்துகின்றன.



இத்தசை இதயத்திலிருக்கக்கூடிய ஒரு திசு என்றும் அது அப்பமாயிருந்து மாறியபோது உயிருள்ள தசையாய் இருந்தது என்பதற்கு அது சுருங்கிய நிலையில் காணப்படுவது ஒரு சான்று என்றும், அறிவியல் ஒப்புக்கொண்டுள்ளது. 5 சிறு உருளைகளாக திரண்டு காணப்படும் இரத்தமும் இத்தசையும் ஒரே உடலை சார்ந்ததாய் உள்ளது என்றும், AB வகையை சார்ந்த அந்த இரத்தம் மனித இரத்தத்தின் எல்லா உள்ளடக்கத்தையும் கொண்டுள்ளது என்றும் 1973 வெளியிடப்பட்டுள்ள அறிவியல் ஆராய்ச்சியின் முடிவுகள் கூறுகின்றன. அது மட்டுமன்றி இதை உலக சுகாதார அமைப்பு ( WHO ) தனது அளவீடுகளின் படி ஆராய்ச்சிக்கு உட்படுத்தி அதன் வாயிலாகவும் இதே முடிவுகளை உறுதிப்படுத்தியுள்ளது.




நற்கருணையின் புதுமைகள் 150க்கும் மேற்பட்ட இடங்களிலும் திருச்சபையால் அங்கிகரிக்கப்பட்டிருந்ததாலும் இலஞ்ச்யானோவின் இந்த புதுமை பெரும் சிறப்பு வாய்ந்ததே - காரணம் இதுவே முதன்மையாக காணப்பட்ட புதுமை என்பதும், இரத்தமும் தசையுமாய் இருவடிவிலும் நிகழ்ந்த புதுமை என்பதும், 12 நூற்றாண்டுகளாய் இதன் சான்று அழியாமல் இருப்பதுவுமே.




வானினின்று இரங்கிவந்த உயிருள்ள உணவு நானே என்று இறைவன் அன்று கூறிய அந்த வார்த்தைகளும், இது என் உடல், இது என் இரத்தம் என்று குருவானவர் வழியாக கிறிஸ்து இன்றும் கூறும் வார்த்தைகளும், உண்மையானவை, உயிருள்ளவை என்று நம்பும் ஒவ்வொருவரும் பேறுபெற்றவரே!!!










photo courtesy: Fr. Anthony Lobo sdb.

No comments: