Thursday, January 11, 2018

சனவரி 12: இறைமக்களின் ஆளுமை

ஆளுவதோ ஆளப்படுவதோ அல்ல அதையும் தாண்டி 

மனித இயல்பின் ஒரு கூறாக சில வேளைகளில் நாம் ஏதாவது ஒருவரின் அல்லது ஒன்றின் ஆளுகைக்கு கீழ் இருக்க விரும்புகின்றோம். அப்படி இருந்துவிட்டால் நாம் பல முடிவுகளை எடுக்க வேண்டியது இல்லை, பலவற்றை குறித்து சிந்திக்க வேண்டியது இல்லை, வெறும் சொல்லப்படுவதை செய்தால் மட்டுமே போதுமென தோன்றுகின்றது. இது உண்மையிலேயே இறைவனின் மக்களின் இயல்பா என்று இன்றைய இறைவார்த்தை நம்மை வினவுகின்றது. 

இறைவன் தன பிள்ளைகளுக்கென ஒரு ஆளுமையை தந்துள்ளார் அதை நாம் உணர்ந்து வாழும் போது இந்த நிலை ஏற்பட வாய்ப்பில்லை என்பதே உண்மை. ஆளுமை என்ற வார்த்தையே மிக அழகாக நமக்கு இறைவார்த்தையை புரிந்துக்கொள்ள வழி செய்கிறது. தன்னை தானே ஆளக்கூடிய அல்லது எது சரி எது தவறு, நான் எதை செய்ய வேண்டும் எதை தவிர்க்க வேண்டும், எது நன்மையானது எது தீமையானது, என்று தானாகவே நிர்ணயிக்க கூடிய திறனையே ஆளுமை என்று கூறுகின்றோம்.  இந்த முடிவெடுக்கும் தன்மையே தெளிந்துதேர்தல் (discernment) என்று கூறுகின்றோம். 

யாரோ ஒருவரோ, ஏதோ ஓன்றோ ஆளும் நிலையில் இருந்தால் நலம் என்று நினைக்கும்  போதே, தவறான மதிப்பீடுகளுக்கு நாம் வழி வகுத்து விடுகின்றோம். எது சரி எது தவறு என்று, எதை செய்வேன் எதை தவிர்ப்பேன் என்று நான் பொறுப்பெடுத்து ஒவ்வொரு செயலிலும் ஈடுபடும்போது நான் இறைவனின் பிள்ளைக்குரிய ஆளுமையை பெருகின்றேன், அந்த ஆளுமையில் வளர்கின்றேன் என்று பொருள். 

இறைவனின் பிள்ளைகள் ஆளுவதா ஆளப்படுவதா என்ற நிலைகளை தாண்டி... தங்களுக்குள்ளே இறைவன் தந்துள்ள ஆளுமையை இழந்துவிடாமல் வாழ்வதே அழைப்பு.

No comments: