Thursday, January 18, 2018

சனவரி 19: அவருக்குரியவர்களாய்....

அவரோடு இருக்கவும், அவர் வார்த்தையை அறிவிக்கவும், அவராக வாழவும்...

தன் சீடர்களாய் தன்னோடு இருக்கவும், தன் வார்த்தையை அறிவிக்கவும், தன்னால் அனுப்பப்பட்டவர்களாய் உலகெங்கும் செல்லவும் பன்னிருவரை கிறிஸ்து தேர்ந்தெடுக்கிறார். அவரோடு இருக்கவும் அவர் வார்த்தையை அறிவிக்கவும் என்றால் அவராகவே வாழ்வது அவருக்குரியோராய் வாழ்வது என்று பொருள்படும். ஆம் சுருங்கக்கூறின் அதுவே நமது அழைப்பு - அவருக்குரியோராய் வாழ்வது. அது இதில் அடங்கியுள்ளது என்பதை இன்றைய முதல் வாசகம் தெள்ளத்தெளிவாய்  எடுத்துரைக்கிறது. 


சவுலும் ஆண்டவரால் தேர்ந்துகொள்ளப்பட்டவரே தாவீதும் அவ்வாறே. ஆனால் தேர்ந்துகொள்ளப்பட்டவராய் வாழ்ந்தது யார் என்று பார்த்தால் அது தாவீதே. பொறாமையாலும், தீய எண்ணங்களாலும் இறைவனுக்கு உரியவற்றை தெரிந்துகொள்ளாமல் தவறானவற்றை தேர்ந்துகொண்ட சவுல் தான் இறைவனால் தேர்ந்துகொள்ளப்பட்டவன் என்ற நிலையையே இழந்துவிடுகிறார். தாவீதோ நன்மையை தேர்ந்துகொள்ளும் தனது குணத்தால் இறைவனுக்குரியவராய் உயர்ந்து நிற்கிறார். 


நான் இருந்த சூழல் அப்படி, என்னோடு இருந்தவர்கள் கூறியது அப்படி, நானாக அந்த முடிவை எடுக்கவில்லை, என்று பலவகையான காரணங்களை நான் அடுக்கலாம், ஆனால் என் சொற்களுக்கு பொறுப்பு நானே; என் சிந்தனைகளுக்கு பொறுப்பு நானே, என் முடிவுகளுக்கு பொறுப்பு நானே, என் செயல்களுக்கு பொறுப்பு நானே! இதை நான் மறுக்கவே முடியாது! நான் எதை தேர்ந்துகொள்கிறேனோ அதுவாகவே நான் மாறுகின்றேன். 

நாம் அழைக்கப்பட்டவர்கள்... அழைக்கும் இறைவனுக்கு உரியவற்றை தேர்ந்துகொண்டு, அவருக்குரியவர்களாய் வாழ முடிவெடுப்போம், முயற்சிப்போம்.



No comments: