Friday, January 19, 2018

சனவரி 20: மதிமயங்கியவராய்...

பிழைக்கத்தெரியாதவர்களாய் மதிமயங்கியவர்களாய் 

இன்றைய முதல் வாசகத்தில் தாவீதை சந்திக்கிறவர்கள் தற்போதைய சூழலிலிருந்து சிந்தித்தால், ஒன்று அவன் நடிக்கிறான் அல்லது அவன் ஒரு மதிகெட்டவன் என்று வெகு எளிதில் கூறிவிடுவார்கள். அரசன் சவுல் இறந்துவிட்டான், அந்த அரியாசனத்துக்கு ஒரே வாரிசு யோனத்தானும் இறந்து விட்டான் என்ற செய்தி தாவீதை வந்து அடைகிறது. தான் அரசனாவதற்கு வழி திறந்தே உள்ளது என்று உணராமல் அழுதுகொண்டிருக்கும் தாவீதை இன்றைய உலகம் அப்படி தான் சொல்லும். நம்மை சுற்றி நடக்கும் அளப்பறைகளை நாம் கவனிக்காமலா இருக்கிறோம். ஆனால் தாவீதின் அந்த அழுகை உண்மையாகவே அவனது உள்ளத்தின் ஆழத்தில் இருந்து வந்தது. அவன் அன்பு செய்த தலைவன் சவுல், அவனை உயிராய் நேசித்த நண்பன் யோனத்தான் - இவர்களின் இழப்பு தாவீதின் உள்ளத்தை தைக்கத்தான் செய்தது.

இன்றும் அடுத்தவரின் நலனுக்காக, பிறர் மகிழ்ச்சியாய் இருக்க வேண்டும் என்பதற்காக, சமூகம் தழைக்க வேண்டும் என்பதற்காக தன் வாழ்வு, உணவு, உறக்கம், உறவுகள் என்று எதையும் பொருட்படுத்தாது உழைக்கும் ஒருவனுக்கு இந்த உலகம் கொடுக்கும் பெயர் : ஒன்று அவன் பிழைக்க தெரியாதவனாய் இருக்க வேண்டும் இல்லை அவன் பெரும் நடிகனாய் இருக்க வேண்டும் என்பதே!

அன்று கிறிஸ்துவையே அப்படி நினைத்தார்கள். மக்களோடே மக்களுக்காகவே என்றெல்லாம் இன்று கூறுபவர்கள் உண்டு, ஆனால் அதை வாழ்பவர்கள் சொற்பமே. அன்று தன தந்தையின் சித்தம் நிறைவேற, மக்கள் வாழ்வு பெற, அந்த வாழ்வை முழுமையாய் பெற  உணவு, உறக்கம், உறையுள் என்று எதையும் பொருட்படுத்தாது வாழ்ந்த இயேசுவை மதிமயங்கியவர் என்று நினைத்தனர் அவருடைய உறவுகள். ஆம், கடவுளுக்காக, கடவுளின் சித்தத்திற்காக மதிமயங்கியவராகவே அவர் வாழ்ந்தார்.

அன்பிற்குரியோரே... நீங்களும் நானும் கூட அழைக்கப்பட்டுள்ளோம் - பிழைக்க தெரியாதவர்களாய்  வாழ... மதிமயங்கியவர்களாய் வாழ... கடவுளுக்காக கடவுளின் சித்தத்திற்காக மதிமயங்கியவர்களாய்!


No comments: