Wednesday, January 24, 2018

சனவரி 25: மனமாற்றம் - கடவுளுக்கான முழுமன தேர்வு

கடவுளை நோக்கிய வாழ்வுக்கான மாற்றம்


தூய பவுலடிகளாரின் மனமாற்றத்தை நினைவுகூரும் நாள் இன்று. நமது மனமாற்றத்தை குறித்து சிந்திக்க அழைக்கிறது இவ்விழா. இன்றைய  காலச்சூழலில் மனமாற்றமும் மதமாற்றமும் ஒன்றிற்கொன்று குழப்பம் தரக்கூடிய சொற்களாக  பயன்படுத்த டுகின்றன. நற்செய்தி அறிவிப்பு என்பது மதமாற்றத்தை நோக்கியதல்ல, மாறாக மனமாற்றத்தை நோக்கியது என்று நாம் ஆழமாக இன்று புரிந்துகொள்ள முயல்வோம். நற்செய்தியை அறிவிக்காவிடில் ஐயோ எனக்கு கேடு (1 கொரி 9:16) என்று கூறுவதை மனதிற்கொள்வோம். 

ஒவ்வொரு நாளும் நற்செய்தி நம்மை வந்து அடைந்த வண்ணமே உள்ளது... அன்று பவுலடிகளாருக்கு ஏற்பட்ட பெரும் காட்சியை போல் இல்லை எனினும், இறைவனின் வார்த்தை நம்மோடு பேசாத தினமே இல்லை, பேசாத பொழுதே இல்லை என்பதே உண்மை. அவ்வாறிருக்க, நாம் இவ்வார்த்தையை உணர்ந்து உள்வாங்குகின்றோமா, ஒவ்வொரு நாளும் மனம் மாறுகின்றோமா என்பதே கேள்வி. இந்த மனமாற்றம் என்பது இறைவனை நோக்கிய பயணம், முழுமையாய் கடவுளை தேர்ந்துக்கொள்ளும் வாழ்க்கை, முழுமனதோடு முழு உள்ளத்தோடு, முழு ஆன்மாவோடு, வாழ்வின் முழு ஆற்றலோடு இறைவனை தெரிந்துகொள்ளும் வாழ்க்கை முறை. இது அன்றாட வாழ்வின் ஒரு சவால் தானே?

 இறைவன் தன் பேசுகிறார் என்று உணர்ந்த மறு தருணமே தரையில் கிடந்த சவுல் கேட்கும் கேள்வியை காணுங்கள்: இறைவா நான் என்ன செய்ய வேண்டும்? இதுவல்லவா நாம் தினம்தினம் கேட்க வேண்டிய கேள்வி - இறைவா இன்று நான் என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கின்றீர்? உம்மை தேர்ந்துகொண்ட வாழ்வு வாழ நான் உண்மையில் என்ன செய்ய வேண்டும்? 

No comments: