Sunday, January 28, 2018

சனவரி 29: இகழ்வோரும் புகழ்வோரும்

இறைவனின் சித்தத்தை மட்டுமே நம்பி இரு  


உங்களை சுற்றி பாருங்கள் - எங்கு நோக்கினும் இகழ்வோரும், புகழ்வோரும், புகழ்வது போல் இகழ்வோரும், நன்மையே கருதுவது போல அழிவை எண்ணுவோரும், துயரம் வருவிப்போரும் சூழ்ந்தே உள்ளனர். இத்தகைய சூழலில் இறைவனுக்கு உகந்த மக்களாய் எப்படி வாழ்வது என்ற பாடத்தை தாவீது நமக்கு கற்பிக்கிறார். அரசனாக இருந்தாலும் தன்னை பழித்தவனை, சபித்தவனை எதிர்த்து ஏதும் செய்ய வேண்டும் என்ற தேவையே தாவீதுக்கு எழவில்லை. அவன் சபித்தால் என்ன சபிக்காவிட்டால் என்ன... இறைவனின் சித்தம் எதுவோ அதுவே எனக்கு வாழ்வு, என்று தெளிவுப்படுத்துகின்றார் தாவீது. அவரல்லவோ உண்மையான கடவுளின் பிள்ளை?

நான் யாருக்கும் எந்த தீங்கும் செய்யவில்லையே, என்னை போய் இப்படி பேசிவிட்டார்களே! ஊர் என்ன சொல்லும், உறவென்ன சொல்லும், பார்ப்பவர்கள் என்ன சொல்லுவார்கள், இந்த உலகமென்ன சொல்லும் என்றெல்லாம் புலம்பி பிதற்றும் அறிவற்ற மானுடங்களான நமக்கு தாவீது தரும் பாடம் இது. 

தாவீது மட்டுமல்ல இயேசு கிறிஸ்துவும் அதையே தான் நமக்கு இன்று செய்தியாக தருகிறார். நீ இறைவனின் மகன், மெசியா  என்றெல்லாம் பேய்கள் புகழ்ந்த போது தன்னை மறந்து விண்வெளியில் பறக்கவில்லை கிறிஸ்து! அமைதியாயிரு! இவரைவிட்டு வெளியே போ என்று அந்த பேய்களையெல்லாம் அடக்கவே செய்தார். அதேபோல், அந்த ஊர் மக்கள் அவரை தங்கள் ஊரை விட்டு வெளியேற சொன்னபோது, நான் நல்லது தானே செய்தேன்... இந்த ஊரில் உள்ளவர்கள் ஏன் என்னை வெளியேற சொல்கிறார்கள்? அவர்களது பன்றிகள் அவர்களுக்கு அவ்வளவு முக்கியமாகிவிட்டதா என்றெல்லாம் கிறிஸ்து ஒரு கேள்வியும் எழுப்பவில்லை. ஏற்றுக்கொள்ளாவிடில் நான் செல்கிறேன்...அதற்காக நான் அழுது புலம்பி என் வாழ்வை மாய்த்துக்கொள்ள மாட்டேன் - ஏனெனில் எனக்கு தேவை, இறைவனின் சித்தம்.

நான் எங்கு செல்ல வேண்டும், என்ன செய்ய வேண்டும், எதை சொல்ல வேண்டும், எதை தேர்ந்துகொள்ள வேண்டும் என்பதையெல்லாம் முடிவு செய்பவர் இறைவனே, என்னை இகழ்வாரோ புகழ்வாரோ அல்ல, என்பதில் நாம் தெளிவாக இருந்தாலொழிய இறைவனின் பிள்ளைகள் என்று நம்மையே அழைத்துக்கொள்ள முடியாது! 


No comments: