Monday, January 29, 2018

சனவரி 30: வித்தியாசமானவர்களாய் ...

கடவுளின் கண்ணோட்டத்திலிருந்து வாழ்ந்து பழகு 


சில நேரங்களில் சிலர் வித்தியாசமானவர்களாய் தோன்றுவதுண்டு. இன்று தாவீது அவருடன் இருந்தவர்களுக்கு அவ்வாறே தோன்றுகிறார். தாவீதை கொள்ளவேண்டுமென துடித்த அவரது மகன் அப்சலோம் போரிலே இறந்த செய்தி தாவீதையும் அவருடன் இருந்தோரையும் வந்து சேருகின்றது! ஒரு எதிரி ஒழிந்தான் என்று அவர்கள் கூடி கொண்டாட, தாவீதோ கண்கலங்கி மாளா துக்கத்தில் ஆழ்ந்துவிடுகிறார். 

கிறிஸ்துவும் சற்று வித்தியாசமாகவே இன்று தோன்றுகின்றார். எங்கு நோக்கினும் மக்கள் கூட்டமாய் இருக்க எல்லா பக்கங்களிலிருந்தும் உரசலும் அழுத்தமுமாய் இருக்க, என்னை யார் தொட்டது என்று இயேசு கேட்கும் கேள்வி சற்று அர்த்தமற்றதாய் வித்தியாசமானதாய் தான் தோன்றியிருக்கும். இறந்த சிறுமியின் அறைக்குள் செல்லும் முன் அவள் இறக்க வில்லை தூங்குகிறாள் என்று அவர் கூறியது இறக்கும் போது உடன் இருந்தவர்களுக்கு வித்தியாசமானதாக தான் இருந்திருக்கும். 

ஆனால் மற்றவர்களிடமெல்லாம் இல்லாத ஒன்று, மற்றவர்கள் எல்லாம் காண தவறிய ஒன்று, மற்றவர்களுக்கெல்லாம் தோன்றாத ஒன்று கிறிஸ்துவிடமும் தாவீதிடமும் இருந்தது என்பதே இதற்கு காரணம். கடவுளின் கண்ணோட்டத்திலிருந்து அனைத்தையும் பார்க்கும் திறனே அது!  

தன்னை கொள்ள நினைத்த ஒருவன் இறந்திருந்தாலும், கடவுளின் கண்ணோட்டத்திலிருந்து பார்த்த தாவீதுக்கு கடவுள் அளித்த கொடையாம் ஒரு மகனை இழந்தது தான் தெரிந்தது. அந்த நோயுற்ற பெண் இயேசுவை தொட்டபோது எந்த அன்போடும், எதிர்நோக்கோடும், நம்பிக்கையோடும் தொட்டாரோ அது இயேசுவுக்கு தெளிவாய் தென்பட்டது, அதை மற்றவர்கள் அறிந்திருக்க வாய்ப்பு இல்லைதான். அந்த இறந்த பெண்ணை கடவுளின் காணோட்டத்திலிருந்து பார்த்த போது ஒரு இறந்த உடலாக அல்ல ஆனால் இறைவனின் மகிமை வெளிப்பட ஒரு மாபெரும் வாய்ப்பாகவே அவருக்கு தென்பட்டது. 

நம் வாழ்வின் வெற்றி தோல்விகளையும், இன்ப துன்பங்களையும், தடைகளையும் தடங்களையும், சோதனைகளையும் வாய்ப்புகளையும், அல்லல்களையும்  எல்லா அனுபவங்களையும் இறைவனின் கண்ணோட்டத்தில் காணக் கற்றுக்கொண்டால் நமது வாழ்வு வேறுபட்டே தோன்றும்... அடுத்தவருக்கு வித்தியாசமானதாகவும், நமக்கு உன்னதமாயும் தோன்றும். இறைவனின் கண்ணோட்டத்திலிருந்து வாழ்வை வாழ தொடங்குவோம், வித்தியாசமானவர்களாய் வாழ்வை அணுகுவோம்... இறைவன் நம்மோடே!


No comments: