Sunday, January 7, 2018

சனவரி 8: வருவது வரட்டும் வா என் பின்னே!

அவர் பின் செல்ல தயக்கம் ஏனோ ...



நீண்ட நாட்களுக்கு பிறகு பொதுக்காலத்திற்குள் மீண்டும் நுழைகின்றோம்- அழகானதொரு அழைப்போடு : என்னை பின்செல். எங்கு, ஏன், எதற்கு என்று கேள்விகள் ஏதுமின்றி பின்செல்லும் மனநிலைக்காக இன்று செபிப்போம். எத்தனை கேள்விகள், எத்தனை எதிர்பார்ப்புக்கள், எத்தனை விருப்பு வெறுப்புக்கள்... இத்தனையும் நமது போக்கிலே வேண்டும் என்ற எண்ணத்தோடே அவரை பின் செல்ல சம்மதிக்கிறோம். 

புத்தாண்டை தொடங்கியுள்ளோம்... எத்தனை எத்தனை முயற்சிகள் பின்னால் வரப்போவதை கணிக்கவும், தெரிந்துக்கொள்ளவும்... ஏன் இந்த கவலை? ஏன் இந்த கலக்கம்? என்னை அழைக்கும் இறைவன் அவற்றை ஏற்கனவே தீர்மானித்திருப்பார் என்ற மனத்திடம் அல்லவா விஞ்சி நிற்க வேண்டும்? இன்றிலிருந்து நாம் சிந்திக்கவிருக்கும் சாமுவேலின் வாழ்வும் அனுபவமும் நமக்கு ஆழமாய் உணர்த்தும் பாடமும் இது தானே? உனக்கென நான் வகுத்துள்ள திட்டங்களை நான் அறிவேன் அன்றோ, என்று எசாயா (29:11) வழியாக இறைவன் கேட்கும் கேள்வி நமது உள்ளத்தில் என்றுமே ஒலித்த வண்ணம் இருத்தல் நலம்.

என்ன வந்தாலும், எது நடந்தாலும் இறைவா உன் வழியினின்று பிறழமாட்டேன் என்று உறுதியெடுப்போம். வருவது வரட்டும், நீ வா என் பின்னே, என்று கிறிஸ்து தரும் அழைப்பு நம்மை இவ்வாண்டு முழுவதும் வழி நடத்தட்டும். 

No comments: