Monday, January 8, 2018

சனவரி 9: இறைவனை புகழும் ஆன்மிக திறன்

ஆன்மிக திறனாளிகளாய் வளர்வோம் 

இறைவனை புகழ்வதென்பது ஒரு ஆன்மிக திறன் என்று உணர்ந்திருக்கின்றீர்களா? அறிவுத்திறன், உணர்ச்சித்திறன், இவ்வரிசையில் ஆன்மிக திறனும் அறிந்து வளர்க்கப்பட வேண்டும். நம்மில் எதனை பேர் இதை அறிந்திருக்கின்றோம்? இறைவனின் அரும்பெரும் செயல்களை வாழ்வின் பெரும் தருணங்களில் மட்டுமல்ல பொதுவான தருணங்களிலும், அன்றாட அனுபவங்களிலும் காணும் திறனே இதற்கு அடிப்படை. ஒவ்வொரு நாளும் செல்லும் சாலைகளில், ஒவ்வொரு நாளும் சந்திக்கும் மனிதர்களில், ஒவ்வொரு நாளும் நமக்கென பிறர் செய்யும் சின்னஞ்சிறு செயல்களில் என்று எல்லாவற்றிலும் இறைவனின் மாட்சிமிகு கரங்களை பார்ப்பது ஒரு திறனாக தானே இருக்க வேண்டும். 

என் ஆன்மா இறைவனை ஏற்றி போற்றுகின்றது என்று மரியன்னை பாடிய பாடலின் முன்னோடியை இன்று பதிலுரை பாடலாய் கொண்டுள்ளோம். மரியன்னை தனது ஆன்மிக திறனில் வளர சாமுவேலின் தாய் பாடிய அந்த பாடல் உதவியது. தனது பிற்கால தலைமுறைகள் ஆன்மிக திறனில் வளர தனது அனுபவத்தை பகிரும் அன்னாளை போல நாம் நமது அடுத்த தலைமுறைகளுக்கு அனுபவத்தை பகிர்ந்துகொள்கின்றோமா?

அன்றாட அனுபவங்களில் இறைவனை காணும் திறன் இருந்துவிட்டால் நமது வாழ்வில் எந்த அனுபவமும் நம்மை அசைத்துவிட முடியாது என்பதை உணர அழைக்கின்றது இறைவார்த்தை. அன்று கிறிஸ்து வாழ்ந்த போது அசுத்த ஆவிகளுக்கும்  பேய்களுக்கும் கூட இருந்த அந்த திறன் சுற்றி நின்ற பலருக்கு இல்லாமல் போயிற்று. இறுதிவரை இவர் யார், இவர் யார் என்று கேட்டுக்கொண்டே இருந்தார்களே தவிர உண்மையில் அவரை கண்டுகொள்ளவில்லை. ஏன்? அவர்களுக்கு அந்த திறன் இல்லாமல் இருந்ததா? அதை அவர்கள் வளர்த்துக்கொள்ள முயற்சிக்கவில்லை என்பதே  உண்மை. 

அவர்களுக்கு என ஒரு சிந்தனை, அவர்களுக்கு என ஒரு உலகம், அவர்களுக்கு என ஒரு விளக்கம் என்று கண் முன்பே நடக்கும் புதுமைகளை எல்லாம் தவறவிட்டுக்கொண்டு இருந்தார்கள். நம் வாழ்விலும், நடப்பதெல்லாம் இறைவனின் சித்தத்தின் படியே நடக்கிறது என்று சிந்தித்து பாருங்கள், வாழ்வை பற்றிய உங்களது கண்ணோட்டமே  மாறும். 

தவறுகள் நடந்தால் இறைவன் பொறுப்பு... நன்மைகள் நடந்தால் அது என் படைப்பு என்று நாம் சிந்தித்தால் நம் வாழ்வின் உட்பொருளே விளங்காமல் போய்விடும். இன்று அதுவே உலகம் முழுவதும் நடந்துக்கொண்டிருக்கிறது.

ஆன்மிக திறனாளிகளாய் வளர்வோம் வாருங்கள்.

No comments: