Tuesday, January 30, 2018

சனவரி 31: வழக்கமானவைகளில் இறைவனை காண

தவறுதலும் தவறவிடுதலும் இயல்பே எனினும்...


தவறுதல், பாவம் செய்தல், நம் குறைகளில் வீழ்தல் என்பன இயல்பான அனுபவங்கள் தான். எனினும் விழுந்த தவறிலேயே இருப்பேன் என்று எண்ணுதல் இறைவனின் பிள்ளைகள் என்ற நிலைக்கு ஒவ்வாததாகும். தாவீது இறைவனின் தேர்ந்துகொள்ளப்பட்ட மகனாக இருந்தும் தவறுகள் செய்தார், அதை திரும்ப திரும்பவும் செய்தார். அனால் அதன் பின்விளைவுகளை சந்தித்த போது தன் பிழையை உணர்ந்துகொண்டார். பல வேளைகளில் இப்படியே, என்றும் நம்மோடு இருக்கும் இறைவனை மறந்துவிட்டு ஏதாவது குழப்பத்தை நமக்கே வருவித்துக்கொண்ட பிறகு அவரை தேடி அலறியடித்து செல்வதை நாம் வழக்கமாகவே கொண்டுள்ளோம். 

இயேசுவின் வாழ்வில் நடந்த அனுபவத்தை பாருங்கள்... இறைமகன் அவர்களோடு இருப்பதை அவர்களால் உணரக்கூட முடியவில்லை. ஏனெனில் இயேசு யார் என்று அவர்கள் அளவுக்கு அதிகமாய் அறிந்திருந்தார்கள். இவ்வளவு சாதாரணமானவரா இறைவனின் மகனாக இருக்க முடியும்? இவர் தச்சனின் மகன் அல்லவா...வழக்கமான சாமானிய மனிதன் அல்லவா என்று புத்திசாலித்தனமாக தங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள். அந்த வழக்கமானவற்றில் தான் இறைவனை தவறவிட்டுவிட்டார்கள்.

இறைவனின் ஆழ்ந்த பிரசன்னம் எல்லா வேளைகளிலும் நம்மோடே உள்ளது என்பதை நாம் அறிந்து புரிந்து உணர்ந்து வாழ அழைக்கப்பட்டுள்ளோம். நமது வழக்கமான நாட்களில், அனுதின அனுபவங்களில், சாதாரண மனிதர்களில், ஆரவாரமற்ற நிகழ்வுகளில் இறைவனையும், இறைவனின் செய்தியையும் தேடி சந்திக்க கற்றுக்கொள்வோம். இல்லையெனில் தாவீதை போல நேரம் தாழ்ந்த பிறகே உணர்ந்து வருந்துவோம். 

வழக்கமானவை என்று நாம் கருதும் எல்லா சூழலையும் மனிதர்களையும் மதிப்போடு அணுகிப்பார்ப்போம், இறைவனை கண்டுகொள்வோம். 

No comments: