Friday, February 9, 2018

பிப்ரவரி 10: உள்ளொன்றும் புறமொன்றும்

நினைப்பது ஒன்று, சொல்வது ஒன்று செய்வது முற்றிலும் வேறொன்றா?


இஸ்ராயேல் மக்களின் தொடக்க கால அனுபவத்தில் அரசியல் வாழ்வு ஒன்று நம்பிக்கை வாழ்வு வேறொன்று என்ற ஒரு நிலை இருந்ததே இல்லை... எல்லா நிலைகளிலும் எப்போதும் இறைவனின் மக்கள் என்ற ஒரே கண்ணோட்டத்தோடும் புரிதலோடும் அவர்கள் வாழ்ந்துவந்தார்கள். உடன்படிக்கையின் மக்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் என்ற தற்புரிதல்களே அவர்களை வழிநடத்தி வந்தது. நான் உங்கள் கடவுளாய் இருப்பேன் நீங்கள் என் மக்களாய் இருப்பீர்கள் என்ற இறைவனின் வாக்கே அவர்கள் பாதைக்கு விளக்காக இருந்துவந்தது. ஆனால் இந்நிலை அதிக காலம் நிலைக்கவில்லை. அதையே இன்றைய முதல் வாசகத்தில் கேட்கின்றோம்! இறைநம்பிக்கையும் அரசியல் நடவடிக்கையும் வெவ்வேறாகி ஒன்றை  விட்டு ஒன்று விலகியது.

அதோடு நிற்கவில்லை... சமய இலாபங்களுக்காக அரசியலும், அரசியல் ஆதாயத்திற்காக சமயமும் பயன்படுத்தப்படும் நிலை தொடங்கியது! உண்மையையும் நீதியையும் குலைக்கும் இந்த நிலை இன்றும் தொடர்ந்துகொண்டு தான் வருகிறது. இது வரலாறு. ஆனால் நம் ஒவ்வொருவர் வாழ்விலும் கூட நிகழக்கூடிய ஒரு அனுபவம் என்பதை நாம் உணர்ந்திட வேண்டும். இறைவனின் மக்கள் முன்னிலையில் நான் ஒருவிதமாகவும், மற்ற நேரங்களில் வேறுவிதமாகவும் வாழ்ந்தேன் என்றால், அதையும் தாண்டி இது போன்ற வெளிவேடத்தால் என்னை சுற்றியுள்ளோரை நான் ஏமாற்றினேன் என்றால், என்னையே நான் கிறிஸ்தவன், கிறிஸ்தவள் என்று அடையாள படுத்திக்கொள்ள முடியுமா?

இந்த இருநிலை  வாழ்க்கையை இயேசு அரவே வெறுத்தார் என்பது நாம் அறிந்ததே. உண்மையுள்ளவர்களாய், அடுத்தவரின் நலனில் உண்மையான அக்கறையுள்ளவர்களாய், உறுதியான நிலைப்பாடுகள் உள்ளவர்களாய், இறைவனோடும் உடனிருப்போரோடும் உண்மையான உறவுகொண்டவர்களாய், நாம் வாழவேண்டும் என்று நம்மை அழைக்கிறார். உள்ளொன்றும் புறமொன்றும் இருப்பின், நாம் சிந்திப்பது ஒன்றும், பேசுவது ஒன்றும், செய்வது முற்றிலும் வேறொன்றுமாக இருக்கும்... அப்பேற்பட்ட வாழ்வை வாழ்ந்து தான் என்ன பயன்?

No comments: