Monday, February 12, 2018

பிப்ரவரி 12: இறைவா, நீ எந்தன் பாறை

பாறையாம் இறைவனை மட்டுமே நம்பி...

இயேசு கிறிஸ்து, தான் வாழ்ந்த போது மற்றனைவரும் தன்னை ஏற்றுக்கொள்ள வேண்டுமெனவோ பாராட்டவேண்டுமெனவோ நினைத்ததே இல்லை. தனக்கு சரி எனப்பட்டதை பேசினார், சரியில்லை எனத்தோன்றியதை சுட்டிக்காட்டினார். தான் யார் என்பதை அறிந்திருந்தார், அதையே வெளிப்படையாய் வாழ்ந்தும் வந்தார். எண்ணியதை பேசினார், பேசியதையே வாழ்ந்தும் காட்டினார்... தான் இழக்கவோ, பெற்றுக்கொள்ளவோ ஏதுமில்லை...இறைவனின் மகன் என்ற தற்புரிதலும் தன்னையும் தன் சொல்லையும் செயலையும் இறைவனே வழிநடத்துகின்றார் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையும் அவருக்கு அசாத்தியமான துணிச்சலை அளித்தது. அதனால் தான் அவரால்  நானும் தந்தையும் ஒன்றே என்று கூற முடிந்தது. பரிசேயர்களாலோ சதுசேயர்களாலோ இதை புரிந்துகொள்ளவே இயலவில்லை! இவரிடம் எதோ ஒன்று வேறுபட்டு உள்ளது என்பதை மட்டும் அவர்கள் தெளிவாக அறிந்திருந்தனர். 

நாம் பலவேளைகளில் நம்மையே நமது செல்வத்தோடும்,  அந்தஸ்து, கெளரவம், என்ற சமூகநிலைகளோடும், உலகம் தரும் பட்டங்கள் பதவிகளோடும், அடுத்தவரின் பாராட்டுகளோடும் அல்லது அவர்களது பார்வைகளோடும் அடையாளப்படுத்திக் கொள்கின்றோம். இவை உலரும் புல்லைப்போன்றும், வாடும் மலரைப்போன்றும் நொடி பொழுதில் நம்மை விட்டு அகலக்கூடியவை, என்று அப்போஸ்தலர் யாக்கோபு நமக்கு நினைவூட்டுகிறார்.

நமது அடையாளம் மாறாத ஒரு புள்ளியிலே நிலைத்து நிற்க வேண்டும் என்பதே இன்றைய வார்த்தையின் அழைப்பாகும்... அது நான் இறைவனின் மகன், இறைவனின் மகள் என்ற உண்மையே! அவரது உருவிலும் சாயலிலும் நாம் படைக்கப்பட்டுள்ளோம் என்ற தன்னுணர்வே. நம்மை அன்பு செய்யும் இறைவனை காட்டிலும் மேலானது வேறேதும் இல்லை என்ற அசைக்க முடியாத ஒரு நம்பிக்கை நம்மை வழிநடத்தவேண்டும். எந்த தீங்கு நம்மை நெருங்கினாலும் சூழ்ந்தாலும், 'இறைவா...நீ எந்தன் பாறை, என்னை யாரும் அசைக்க வியலாது' என்று துணிச்சலோடு வாழ முடிவெடுப்போமா?

No comments: