Thursday, February 1, 2018

பிப்ரவரி 2: சோதனைகள் - விழப்போகிறாயா? எழப்போகிறாயா?

இயேசுவை காணிக்கையாக ஒப்புக்கொடுத்த திருவிழா 




எங்களை சோதனையில் விழவிடாதேயும் என்று ஒவ்வொரு நாளும் செபிக்கின்றோம்... சோதனைகள் இன்றி மனித வாழ்வு இல்லை. இந்த சோதனைகளின் மத்தியில் தான் நமது வாழ்வின் உண்மையான தரம் விளங்குகின்றது. இன்று கோவிலிலே அந்த அற்புத குழந்தையை கையில் ஏந்தி நிற்கும் மரியன்னையின் வாழ்வில் தான் எத்தனை எத்தனை சோதனைகள்... ஆனால் எதுவுமே அவரை பாதிக்காதது போல அவரால் எப்படி வாழ முடிந்தது? அதுவே அவர் நமக்கு தரும் மாபெரும் பாடம்: தன்னையே முழுமையாய் இறைவனிடம் சரணாக்கியதால் வந்த ஆழ்மன அமைதி அது. எத்தனை துன்ப அலைகள் சூழ்ந்தாலும் ஆழ்கடலை போல அமைதியாய் வாழும் நிலை - எவ்வளவு அழகானதொரு எடுத்துக்காட்டு!

சோதனைகள் வரும் போது விழுவதும் எழுவதும் எதை பொருத்தது தெரியுமா? அந்த சோதனைகளை எந்த மனநிலையோடு நாம் எதிர்கொள்ளுகின்றோம் என்பதை பொருத்ததே. என் வாழ்வில் வரும் சோதனைகள் எல்லாம் என்னை புடமிடவே, தூய்மைப்படுத்தவே, செம்மையாக்கவே, உறுதியூட்டவே என்று உணர்ந்து அவற்றை எதிர்கொண்டால்  என் மனம் நிதானமடைகின்றது. அத்தனை குழப்பங்கள் இருந்தும் அமைதியாய் காணப்படும் தூய யோசேப்பை பாருங்கள்... ஆழ்மன அமைதிக்கு மற்றுமொரு அருமையான எடுத்துக்காட்டு. 

வரும் ஒவ்வொரு சோதனையும் என்னை விழச்செய்யும் அல்லது வீறுகொண்டு எழச்செய்யும். விழுந்துகிடக்கின்றேனா அல்லது எழுந்துநடக்கின்றேனா என்பதை பொறுத்தே நான் இறைவனின் பிள்ளையா இல்லையா என்பது விளங்கும். இன்று காணிக்கையாக்கப்படும் அந்த குழந்தை கடவுளின் மகன் என்பதை தன் பிறப்பினால் மட்டுமல்ல, வாழ்வின் ஒவ்வொரு தருணத்திலும் விளங்க செய்தார் - தன்னையே முழுவதும் இறைவனுக்கு சரணாக்கியதன் வழியாக. அவரை விட சோதனைகளால் உறுதிபெற்று எழுந்து ஒளிவீசிய ஒரு எடுத்துக்காட்டை நம்மால் காண முடியுமா?

இவற்றால் தான் இந்நாளை உலக துறவறத்தார் நாளாக கொண்டாட திருச்சபை நம்மை அழைக்கின்றது. துறவறத்தாருக்காக மட்டுமல்ல, இறைவனின் பிள்ளைகளாகிய நம் ஒவ்வொருவருக்காகவும் இன்று செபிப்போம். நம் வாழ்வை இறைவனிடம் முழுமையாய் சரணாக்கி வாழ்ந்து, ஆழ்மன அமைதியை நாம் ஒவ்வொருவரும் கண்டுக்கொள்ள வேண்டுமென்று செபிப்போம்.


No comments: