Tuesday, February 27, 2018

பிப்ரவரி 28: இறையாட்சியின் நிலைப்பாங்கிற்கு மாறுவோம்!

இறையாட்சியின் நிலைபாங்கா இவ்வுலகின் நிலைபாங்கா? 


இன்றைய வார்த்தை வாழ்வின் இரண்டு நிலைப்பாங்குகளை (MODES) முன்னிறுத்துகின்றது - ஒன்று, இறையாட்சியின் நிலைப்பாங்கு மற்றொன்று இவ்வுலகின் நிலைப்பாங்கு.

இறையாட்சியின் நிலைப்பாங்கு என்பது கிறிஸ்துவின் நிலைப்பாங்கு : தன் வாழ்வை இறைவனின் பார்வையிலிருந்து புரிந்து வாழ்வது. இறைவனுக்கும் இறைசித்தத்திற்கும் முக்கியத்துவத்தை வழங்குவது, அடுத்தவரின் நலன் கருதுவது, எல்லாருக்கும் பணிபுரியும் மனநிலை கொள்வது, மனிதம் முழுவதும் வாழ்வு பெறவேண்டும் அதை முழுமையாய் பெற வேண்டும் என உழைப்பது! 

இவ்வுலகின் நிலைப்பாங்கை பாருங்கள்: நான், எனது, என் உயர்வு, எனது ஆதாயம், எனது நலன் என்று என்னை பற்றி மட்டுமே சிந்திக்கும் மனநிலை அது. கோடிக்கணக்கான மக்கள் ஒரு வேளை உணவின்றி தவிக்கும் இதே பாரத நாட்டில் ஆயிரக்கணக்கான கோடிகள் மோசடி செய்யப்படுவதும் கையாடப்படுவதும் நடக்கக்கூடும் என்றால் இதை விட பெரிய எடுத்துக்காட்டு வேண்டுமா என்ன? 

அடுத்தவரை குறை கூறுவது எளிது... ஆனால், நான் எந்த நிலைப்பாங்கில் என் வாழ்வை வாழ்ந்துகொண்டிருக்கிறேன் என்று நான் மட்டுமே உண்மையில் கூற முடியும். பல வேளைகளில் நமது வாழ்வு இறையாட்சியின் நிலைப்பாங்கிற்கும், இவ்வுலக நிலைப்பாங்கிற்கும் இடையே மாறி மாறி வாழப்படலாம். அது எப்போது இறையாட்சியின் நிலைப்பாங்கிற்கு உறுதியாய் மாற்றப்பட போகிறது என்று கிறிஸ்து நம்மை வினவுகிறார். 


பவுலடிகளார் கூறுவது போல நாம் கிறிஸ்துவின் மனநிலையை அணிந்துகொள்ள (பிலி 2:5) அழைக்கப்படுகிறோம். அதை அணிந்துகொள்ளும் போதே நம் வாழ்வு இறையாட்சியின் நிலைப்பாங்கிற்கு உறுதியாய் மாறுகிறது!

No comments: