Thursday, February 8, 2018

பிப்ரவரி 9: நானே உன் கடவுள்!

இறைவனில் வாழும் வாழ்வே நிலை வாழ்வு


வாழ்வும் வீழ்வும், உயர்வும் தாழ்வும், எழுச்சியும் வீழ்ச்சியும் உண்மையில் எதில் அடங்கியுள்ளது என்பதை சிந்திக்க அழைக்கிறது இன்றைய இறைவார்த்தை. இரண்டு அரசுகளை குறித்து நாம் படிக்கின்றோம்... வீழ்கின்ற ஒன்றும் எழுகின்ற ஒன்றும்! தாவீதுக்கு இறைவன் அளித்த அரசின் வீழ்ச்சியும், என்றும் அழியாத இறையரசின் எழுச்சியும் நம் கண் முன்னே வைக்க படுகின்றது. செவிடர் கேட்கின்றனர் ஊமையர் பேசுகின்றனர் என்ற அந்த கூற்று, இறையரசின் அறிவிப்பாய் நமக்கு தரப்படுகின்றது... அதற்கான காரணம்? இறைவார்த்தை அறிவிக்கப்பட்டது, இறைவார்த்தை ஏற்கப்பட்டது, இறைவார்த்தையின் படி வாழ அவர்கள் முன் வந்தனர் என்பதே. 

நான், என் சாதனைகள், என் வெற்றி, என் திட்டங்கள், எனது வாழ்வு என்று தற்பெருமையிலும், அகந்தையிலும் நான் வாழும் போது நெருங்கி வரும் வீழ்ச்சியை காணாமலேயே நான் என்னையே இழந்து விடுகிறேன். இறைவனின் சித்தப்படி, அவரது வார்த்தையின் படி வாழ்வதை நான் முன் நிறுத்தாது, எனது விருப்பப்படி, எனது ஆசையின்படியெல்லாம் வாழ முனையும் போது எனது வீழ்ச்சிக்கு நானே வழிவகுக்கிறேன் என்று உணர வேண்டும். ஆதாம் ஏவாளின் அனுபவமோ, பாபேல் நகர கோபுரத்தின் அனுபவமோ, சாலமோன், சிம்சோன் என பலரின் அனுபவமோ நமக்கு தரும் எச்சரிக்கை இதுவல்லவோ? எனது தற்பெருமையும் அகந்தையுமே  பாவத்தின் நுழைவாயில்!

இந்த தற்பெருமையாலும், அகந்தையினாலேயும் தான் நான் எனக்கென சில கடவுள்களை உருவாக்கிக்கொள்கிறேன் - நான் என்ற கடவுள், என் பெயரும் புகழும் என்ற கடவுள், என் சாதனைகள் என்ற கடவுள்,எனது சுகவாழ்வு என்ற கடவுள் என்று எத்தனை கடவுள்கள்! 

இன்று இறைவன் நமக்கு தரும் நினைவூட்டல் இதுவே: நானே உன் கடவுள், என் குரலுக்கு செவிமடு! இறைவனின் குரலை கேட்டு, இறைவனில் வாழ்ந்து நிலை வாழ்வுக்கு உரியவர்களாவோம்! 


No comments: