Sunday, March 11, 2018

மார்ச் 12: நம்பிக்கையோடு திரும்பி நட

ஒளியை நோக்கி, மகிழ்ச்சியை நோக்கி, திரும்பி நட 

நேற்றைய தினம் தவக்காலத்தின் நான்காம் ஞாயிறன்று இறைவார்த்தை நம்மை மகிழ்ந்து களிக்கூற அழைத்திருந்தது... நாம் பாவிகளாய் இருந்தாலும், தவறியவர்களாய் தடமாறுகிறவர்களாய் இருந்தாலும், இறைவன் நமது தவறுகளை கணக்கில் கொள்வதில்லை, அன்புடன் நம்மை தம் பிள்ளைகளாகவே நேசிக்கிறார்! இதைவிட நாம் மகிழ்ந்து களிக்கூற வேறு காரணங்கள் நமக்கு தேவையா என்ன! அதே அழைப்பு இவ்வார தொடக்கத்திலும் தொடர்கிறது!

துக்கத்திலிருந்து சந்தோஷத்திற்கு, துன்பத்திலிருந்து இன்பத்திற்கு, இருளிலிருந்து ஒளிக்கு, வழியறியா நிலையிலிருந்து ஒளிமிகு வாழ்விற்கு இறைவன் நம்மை அழைக்கிறார் - அந்த அழைப்பை ஏற்க நாம் தயாரா? நம்மில் பலர் துன்பங்களோடே, துக்கங்களோடே, மனதில் புலம்பல்களோடே வாழ பழகிவிட்டிருக்கிறோம்! அங்கிருந்து புறப்படுவது என்பதே நமக்கு அரிதாய் இருக்க மகிழ்ச்சியை நோக்கி, ஒளியை நோக்கி நாம் எங்கு பயணிக்க போகிறோம்?

உண்மையிலேயே இப்பயணத்தின் பெரும்பகுதி பயணிக்க எடுக்கும் முடிவில் தான் இருக்கிறது...இன்றைய நற்செய்தியில் நாம் காணும் அந்த அரச அலுவலரைப்போல நாம் இறைவனின் குரல் கேட்டவுடனேயே முடிவெடுத்து திரும்பி பயணிக்க தொடங்க வேண்டும் என்று இறைவார்த்தை நமக்கு பணிக்கிறது. நீ செல், உனது மகன் வாழ்வான் என்று கிறிஸ்து கூறியவுடன், திரும்பி செல்லும் அந்த நம்பிக்கை - அதுவே அவரது அசீர்மிகு வாழ்வுக்கு அடிக்கல் ஆனது. 

சில வேளைகளில் சிலர் தங்கள் வாழ்வின் துன்பங்களை பகிர வரும்போது, அவர்கள் செய்யவேண்டியது என்று எதை நாம் கூறினாலும் அதற்கு எதிராய் ஏதாவது ஒன்றை கூற அவர்கள் தயாராகவே இருப்பார்கள்; அவர்களது சிக்கல்களிலிருந்து வெளியேற நாம் கூறும் எந்த ஒரு வழியும் அவர்களுக்கு உதவக்கூடியதாகவே தோன்றாது! அவர்கள் பகிரும் விதத்திலிருந்தே அவர்கள் அந்த சிக்கலில் இருந்து வெளிப்படும் சிந்தனையிலேயே இல்லை என்பது தெள்ளத்தெளிவாக நமக்கு புரிந்துவிடும்!

இவர்களை பார்த்தே இறைவன் இன்று கூறுகிறார்... நம்பிக்கையோடு திரும்பி நட... உன் வாழ்வில் ஓளி பிறக்கும், உன் துன்பங்கள் இன்பங்களாய் மாறும், உன் சோகங்கள் மகிழ்ச்சியாய் மலரும், உன் சோதனைகள் சாதனைகளாய் மிளிரும்... நம்பிக்கையோடு திரும்பி நட. இறைவனை, இறைவனின் வார்த்தையை மனதில் கொண்டு நம்பிக்கையோடு திரும்பி நட!


No comments: