Friday, March 16, 2018

மார்ச் 17: உண்மையான புரிதல்களை வளர்த்துக்கொள்வோம்

ஊகங்களும் கற்பனைகளும் புறளிகளும் உண்மைகளாகா!


கலிலேயாவிலிருந்து நன்மை எதுவும் வராது என்ற தீர்ப்பானாலும், இயேசு கலிலேயாவிலிருந்து வருகிறார் என்ற அவர்களது தரவானாலும், அது தவறாகவே இருந்தது! முழுமையான உண்மை அறியாமல் நாம் உருவாக்கிக்கொள்ளும் எண்ணங்கள் தவறான தீர்ப்புகளாகிவிடுகின்றன. தீர்ப்பிடுவதே தவறு எனும்போது தவறான தீர்ப்பு... சற்று சிந்தித்துப்பாருங்கள். அரைகுறை புரிதல் என்பது ஆபத்துக்குரியது. நான் பெற்றிருப்பது அரைகுறை புரிதல் என்று உணராதிருப்பது பேராபத்துக்குரியது! 

இன்றைய சமுதாயத்திலே இது எங்கும் நிறைந்துள்ளது. தெரிந்த தவறான தகவலை வைத்துக்கொண்டு எல்லாம் அறிந்தது போல் பேசும் மேதாவிகள், அவர்களையும் மூடர்களாய் பின்தொடரும் அறிவிலிகள், வேண்டுமென்றே அரைகுறை தகவலை தந்து மக்களை திசை திருப்பும் தீயசக்திகள், இருக்கும் அமைதியை தங்கள் நலனுக்காக குலைப்பதற்கென்றே புரளிகளை உண்மைகளாய் திரித்துவிடும் சுயநலவாதிகள், மக்களை பிரித்து மாக்களாய் மாற்றும் நயவஞ்சகர்கள்... இவை அனைத்தையும் நாம் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம்!

இன்று நற்செய்தியில் இந்த அவல நிலைக்கு இயேசுவே ஆளாவதை நாம் காண்கின்றோம். அன்று மட்டுமல்ல, இன்றும் நாம் இது போன்ற போக்குகளால் எளியவரை, யாருமற்றவரை, பின்புலங்கள் பெரிதாய் இல்லாதவரை பகடைக்காய் ஆக்கும் போது கிறிஸ்து இதே அவலத்திற்கு உள்ளாகிறார். எத்தனை முறை என்னை நான் காப்பாற்றிக்கொள்ள அடுத்தவரை பயன்படுத்திவிடுகிறேன்! என் தேவைகளையும் எண்ணங்களையும் நியாயப்படுத்திக்கொள்ள அடுத்தவரின் பலவீனத்தை பயன்படுத்திக்கொள்கிறேன்.

இதை உணர்ந்துகொள்ள மனதிடம் தேவைப்படுகிறது. இதை ஏற்றுக்கொள்ள துணிச்சல் அதிகம் தேவைப்படுகிறது. இதை மாற்றிக்கொள்ள  உண்மையும் இறையருளும் தேவைபடுகிறது. இறைஞ்சுவோம்... அடுத்தவரை குறித்தும், நற்கிறிஸ்தவ வாழ்வு குறித்தும் உண்மை புரிதல் வேண்டுமென இறைஞ்சுவோம். மனங்களை திறப்போம் உண்மை புரிதல்களை வளர்த்துக்கொள்வோம்.

No comments: