Wednesday, March 21, 2018

மார்ச் 22: உடன்படிக்கையின் மக்கள் யார்?

தேர்ந்துகொள்ளப்பட்ட மக்கள் என்பதன் உண்மை பொருள் என்ன? 


வார்த்தைக்கு வார்த்தை தாங்கள் தேர்ந்துகொள்ளப்பட்ட மக்கள், உடன்படிக்கையின் மக்கள், என்பதை கூறிக்கொண்டாலும் உண்மையிலேயே அதன் பொருள் என்ன என்று அறியாமலேயே இருந்தார்கள் அவர்கள். செல்வமும், செழிப்பும், சந்ததியும் பெறுவது மட்டும் தான் தேர்ந்துகொள்ளப்பட்ட மக்கள் என்பதற்கு அடையாளம் என்று நினைத்தார்கள். பாலும் தேனும் பொழியும் பூமியும் கடல் மணலையும் விண்மீனையும் போன்ற சந்ததியும் இறைவனின் ஆசீர்வாதங்கள் தான்... எனினும் அவரது உடன்படிக்கையின் மக்களாய் வாழ்வது என்பது  இவை மட்டுமல்ல என்று அவர்களுக்கு புரிய வைக்க கிறிஸ்துவுக்கு அவரது வாழ்நாள் போதவே இல்லை! 

இறைவனோடு நமக்குள்ள உடன்படிக்கை நம்மை அவரைப்போன்றே மாற்றுகின்றது, மாற்றவேண்டும் என்பதே கிறிஸ்துவின் படிப்பினை. இறைவனை போன்றே நாமும் ஆவிக்குரியவர்கள், அழிவில்லாதவர்கள், நிலைவாழ்வுக்கு உரியவர்கள் என்பதை நாம் உணர வேண்டும். நமது மண்ணக வாழ்வு என்பது நமது வாழ்வில் மிக மிக சிறியதொரு பங்கு தான்... நாமோ முடிவில்லா வாழ்வுக்காக படைக்கப்பட்டவர்கள். இதை நாம் அறிவது எப்போது?

இந்த மாபெரும் உண்மையை மறந்துவிட்டு இவ்வுலக கவலைகளை, இவ்வுலகை சார்ந்த நாட்டங்களை  முன்னிறுத்தி, செபத்திலும் சரி, நமது சிந்தனைகளிலும் சரி எப்போதும் அவற்றையே மையப்படுத்தும் போக்கு மாறவேண்டாமா? செல்வமும் செழிப்பும் பணமும் பதவியும் வெற்றியும் வெளித்தோற்றமும் தான் நமது வாழ்வு என்றால், அது தான் இறைவனிடம் நமது செபம் என்றால் நமது நம்பிக்கை எத்தனை சாரமற்றதாய் உள்ளது என்பது வருந்தத்தக்கது. 

இறைவனை பற்றிக்கொள்,
உனக்கு எல்லா வசதியும் வாய்ப்பும் வந்து சேரும் என்று கூறுபவர்கள் இன்று அதிகம் ... ஆனால் நாம் சொல்ல வேண்டியது என்ன? இறைவனை பற்றிக்கொள் - இந்த உலகம் உன்னை வெறுக்கும், எதிர்க்கும், தூற்றும்... ஆனால் அவற்றை எல்லாம் தாண்டி ஆழமான அர்த்தம் உன் வாழ்வில் பிறக்கும் - இதுவல்லவா நாம் சொல்ல வேண்டியது... இதை தான் கிறிஸ்து இன்று கூறுகிறார்... கேட்க போகிறாயா அல்லது கல்லெறிய போகிறாயா?


No comments: