Friday, March 23, 2018

மார்ச் 24: இணைக்கும் கரங்களே இறைவனின் கரங்கள்

நம்பிக்கை வாழ்வின் உண்மை பொருள் அன்பே!


மறைப்பணி மையமொன்றில் பணிபுரியும் அழகான வாய்ப்பினை இறைவன் எனக்கு தந்திருந்தார். அந்த ஆண்டுகளில் எனக்கு கிடைத்த பல அனுபவங்களில் ஒன்றை பகிர விழைகிறேன். அந்த மையத்தை சார்ந்த குழு ஒன்று உண்டு... எதையும் எதிர்பாராது இறைவனின் பாடுகள் குறித்த செய்தியை மக்கள் மத்தியிலே கொண்டு சேர்க்க ஒலி ஒளி நாடகங்களை தயாரித்து அரங்கேற்றும் தன்னார்வ தொண்டர்களின் குழு அது. எங்கெல்லாம் இந்த நிகழ்வு நடக்கின்றதோ அங்கு நான் இந்த குழுவினரை ஒவ்வொருவரை அறிமுகப்படுத்த தவறுவதில்லை அவ்வாறு அறிமுக படுத்தும் போது ஒருவரை தவறாமல் பெருமையோடு அறிமுகப்படுத்துவேன், ஏனெனில் அவர் ஒரு கத்தோலிக்கரல்லாத சபையை சார்ந்தவர் ஆனால் இந்த பணியை ஆர்வமாய் செய்பவர். அவரை போன்றே மற்றொருவரும் இந்த குழுவில் உண்டு அவரும் கத்தோலிக்கரல்லாத ஒரு சபையை சார்ந்தவர், ஒரு திருச்சபையின் போதகர் (பாஸ்டர்). இந்த குழுவோ ஒரு கத்தோலிக்க கிறிஸ்தவ குழு. எத்தனை அழகானதொரு சாட்சியம் பாருங்கள்.இதை தவற விடலாமா... இணைக்கும் கரங்களும் இணையும் கரங்களும் இறைவனுக்கு சொந்தமானவை என்று மக்களுக்கு சொல்ல இதை விட வேறு என்ன வாய்ப்பு கிடைக்கமுடியும்!

இன்றைய இறைவார்த்தை இறைமகனின் பனியின் நோக்கம் என்னவாக இருந்தது என்பதை நாம் உணர அழைக்கின்றது... சிதறிய மந்தையை ஒரே இறைவனின் மக்களாய் ஒன்று சேர்ப்பதே அப்பணி. நிலவாரியாக, பொருளாதார ரீதியாக, சமூகரீதியாக, ஆன்மிகரீதியாக, என எல்லா வகையிலும் பிரிந்துள்ள மக்களை எல்லாம் ஒரே தந்தையும் தாயுமானவரின் பிள்ளைகளாக, ஒரே மந்துள்ள மக்களாக ஒன்று சேர்ப்பதே இறையரசின் கனவு. இதற்காக உழைப்பவர்கள் உண்மையில் இறைவனின் பணியாளர்கள், கிறிஸ்துவின் சீடர்கள்.

இறைமக்கள் என்று தங்களையே அழைத்துக்கொள்ளும் சிலர், அதிலும் இறைமக்களுக்கெல்லாம் வழிகாட்டியாக இருக்கவேண்டிய பொறுப்பில் உள்ள சிலரும் கூட பிரிவினைகளிலும், போட்டிமனப்பான்மைகளிலும், ஏற்றத்தாழ்வுகளிலும் தங்களையே இழந்து வருகின்ற அவலத்தை சில வேளைகளில் நாம் காணவேண்டியுள்ளது. இது உண்மையிலேயே நம்பிக்கையின் வாழ்வா? சிந்தித்து பாப்போம்! என்னோடு சேகரிக்காதவன் சிதறச்செய்கிறார் (லூக் 11:23) என்று கிறிஸ்து கூறுவது நம் உள்ளங்களில் ஒலிக்கட்டும். 

கிறிஸ்துவின் ஆவியை கொண்டுள்ளோர் இறையரசின் கனவை கொண்டுள்ளோராவர் ... இறையரசின் கனவை கொண்டுள்ளோர், மக்களை இணைக்கும் மனநிலையை கொண்டுள்ளோராவர். ஆவியிலும் அன்பிலும் மனிதத்தை இணைக்க பாடுபடுவோரே உண்மையில் இறைவனின் மக்கள், நம்பிக்கையின் மக்கள், இறையரசின் மக்கள், கிறிஸ்தவ மக்கள்!

No comments: