புனித சனி - 31.03.2018
ஆண்டு முழுவதிலும் புனித சனியான இன்று மட்டுமே திருச்சபையில் எங்குமே திருப்பலி ஆற்றப்படுவதில்லை... நற்கருணையும் தரப்படுவதில்லை (அது இறுதி நற்கருணையாய் இருந்தால் ஒழிய). ஏனெனில், இன்று கிறிஸ்து கல்லறையில் அடங்கிய நாள்; அவர் பாதாளத்திற்கு இறங்கினார் என்று நாம் நம்புகிறோமே, நம் பாவங்களுக்காக, நம் மீட்புக்காக அந்த பாதாளங்களில் புதைந்த நாள்.
கல்லறையின் அமைதி நம்மை சிந்திக்க வைக்கிறது... இறந்தவர் வீட்டில் கிடத்தப்பட்டிருக்கும் போது அந்த வீட்டில் நிலவும் அமைதி போன்றதொரு அமைதி இன்று திருச்சபையில் நிலவுகின்றது. இந்த அமைதி எப்போது கடந்து போகுமோ என்று எண்ணுவதை காட்டிலும், இந்த அமைதி நமக்கு தரும் பாடம் என்ன என்று தேடி பற்றிகொள்வது சாலச்சிறந்ததாகும்.
பல வேளைகளில், சிறப்பாக நம் வாழ்வில் நிகழ்வுகள் நாம் நினைத்தது போலல்லாமல் நடக்கும் பொது, கடவுளை தேடி நாம் எங்கெல்லாம் போகிறோம் என்று சற்று சிந்தித்து பாருங்கள்... எத்தனை இடங்கள், எத்தனை நபர்கள், எத்தனை விதமான முயற்சிகள்... காரணம்: நாம் இயல்பாய் வாழ்ந்த நாட்களில் அவரை அறியாமலும், அவர் உடனிருப்பதை உணராமலும் வாழ்வதே. உன் இளமை காலத்திலேயே இறைவனை நாடு என்று சங்கீதம் சொல்வது வெறும் வயதால் இளமை காலம் அல்ல ஆனால் தொல்லைகளற்ற வாழ்நாள் பருவத்தையே. அப்படிப்பட்ட காலத்திலே இறைவனை அறிய ஒரே வழி... அமைதி!
அமைதியில் நீ உனக்குள்ளே புதைந்து தேடும் போது உனக்கும் உறையும் இறைவனை, உன் உள்ளத்தில் வாழும் கடவுளை, கண்டுகொள்ள முடியும், அவரோடு உறவுகொள்ள முடியும். அந்த உறவு, உன் கடினமான காலத்திலே உனக்கு கைப்பிடியாய் கால்தடமாய் வந்து உதவும். இதோ அந்த அமைதியை சுவைத்திட ஒரு நாளை தருகிறது திருச்சபை.
அமைதியில் அமர்வோம், இறைவனை சந்திப்போம், உறவாடி உயிர்ப்போம்.
No comments:
Post a Comment