Thursday, April 12, 2018

ஏப்ரல் 13: நிலைபெறும் நம்பிக்கை

தப்பித்தல்...நழுவுதல்...தழுவுதல்...நிலைபெறுதல்!

வாழ்வில் சோதனைகளை சநதிக்காதோர் யாரும் இலர்! அதை சந்திக்கும் விதத்திலே தான் மக்கள் வேறுபடுகின்றனர்! கிறிஸ்தவராய் அடையாளம் காணப்பட வேண்டுமென்றால், நாம் சோதனைகளை சந்திக்கும் விதம் எப்படி இருக்கவேண்டுமென இன்றைய இறைவார்த்தை நமக்கு எடுத்து கூறுகின்றது... திருத்தூதர் பணியில் முதற்கிறிஸ்தவர்களும் நற்செய்தியில் கிறிஸ்துவும் இதை நமக்கு கற்றுக்கொடுக்கின்றனர்... 

அத்தனை பெரிய கூட்டம் இருக்கிறது என்று கிறிஸ்து அந்த பிரச்சனையிலிருந்து தப்பித்துவிடவில்லை. எங்களுக்கும் இதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று சீடர்களும் நழுவிவிடவில்லை! அதுபோலவே, எதிர்த்து நின்ற யூதர்களும் உரோமையர்களும் எத்தனை ஆற்றல் மிக்கவர்களாக இருந்தாலும் பயத்தினால் அவர்கள் சொல்வதை முதற்கிறிஸ்தவர்கள் தழுவிக்கொள்ளவும் இல்லை.

நம் வாழ்வில் சில நேரங்களில் சோதனைகள் வரும்போது எப்படி தப்பிக்கலாம் என்றே முதலில் நாம் சிந்தித்தோம் என்றால் நாம் உண்மையிலே கிறிஸ்துவின் மனநிலையை கொண்டவர்களா? 

சோதனைகள் வரும்போது யார் மீது பழி சுமத்தலாம், நமது பொறுப்பையும், கடமையையும் நமது தோள்களிலிருந்து உதறித்தள்ளி எப்படி நழுவலாம் என்பதே நமது சிந்தனையானால், நாம் கிறிஸ்துவின் சீடர்களா?

நமக்கேன் தொல்லை, சற்று குழைந்து தான் போவோமே என்று எதிர்த்துவரும் ஆற்றல்களை வேறு வழியின்றி தழுவ தயாராகிவிடும்போது நாம் உண்மையிலேயே அவரது வழித்தோன்றல்களா?

எத்தனை சோதனைகள் வந்தாலும் உண்மையிலும் நன்மையிலும் நிலைபெறும் போது... இன்று இல்லையென்றாலும் ஒருநாள் உண்மையும் நீதியும் அன்பும் முளைத்தெழும் என்ற மன உறுதியில் நிலைபெறும் போது... எதை இழந்தாலும், என் உயிரையும் இழந்தாலும், என் உயிர்த்த கிறிஸ்துவோடு இருக்கும் போது எனக்கு இழப்பேது என்ற நம்பிக்கையில் நிலைபெறும் போது ... நான் அவராகிறேன்! அவரது சீடராகிறேன்! அவரது வழித்தோன்றலாகிறேன்! 

நிலைபெறும் நம்பிக்கையில் வளர முடிவெடுப்போம்!

No comments: