கருத்தியல் உண்மைகளும் வாழ்வியல் அனுபவமும்
இந்த நாட்களிலே தொடக்க கால திருச்சபையை பற்றி நாம் படித்து கொண்டு வருகிறோம். நாம் அறியும் ஒரு தெளிவான உண்மை... அவர்களை சுற்றியிருந்த சூழல் கடுமை ஆக ஆக, அவர்களும் மேலும் மேலும் வலிமை பெற்றவர்களாய் மாறிக்கொண்டே வந்தனர்! காரணம்... அவர்களது அனுபவம், உயிர்த்த கிறிஸ்துவின் அனுபவம்! அந்த அனுபவம் அவர்களை முற்றிலுமாய் மாற்றியிருந்தது.
இன்று பல இடங்களிலிருந்து கிறிஸ்தவ சகோதர சகோதரிகள் துன்புறுத்தப்படுவது பற்றியும், தாக்கப்படுவது பற்றியும், அச்சுறுத்தப்படுவது பற்றியும், மிரட்டப்படுவது பற்றியும் செய்திகள் நமக்கு வந்த வண்ணமே உள்ளன. சிந்திக்க தயாரில்லாத அடிப்படைவாதிகளின் எந்த அச்சுறுத்தலுக்கும் அஞ்சாது துணிந்து தங்கள் கிறிஸ்தவ வாழ்வையும் சாட்சியத்தையும் தொடரும் இந்த சகோதர சகோதரிகளும் கூட, அதே அனுபவத்தால் ஆட்கொள்ளப்பட்டவர்களே.
நேற்று நாங்கள் சிலர் பேசிக்கொண்டிருந்த போது ஒருவர் சில இளைஞர்களை பற்றி பகிர்ந்துகொண்டார்... அந்த இளைஞர்கள் சிரியாவுக்கு செல்ல தாங்கள் தயாராய் இருப்பதாகவும், அங்குள்ள போராலும் அமைதியின்மையாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறவும் உதவவும் வேண்டுமென ஆவலாய் இருப்பதாகவும் கூறியுள்ளார்கள். இவர்களும் உயிர்த்த கிறிஸ்துவின் அனுபவத்தால் ஆட்கொள்ளப்பட்டவர்களே!
கிறிஸ்து வெறும் கருத்தியலாய் இருந்துவிட்டால் போதாது, நாம் தாங்கிப்பிடிக்கும் உண்மையாய் இருந்துவிட்டால் போதாது...நம்மை ஆட்கொள்ளும் அனுபவமாக அவர் மாற வேண்டும். கிறிஸ்து யார் என்று நான் எனது அனுபவத்தால் பிறரோடு பகிர வேண்டும். அப்போது மட்டுமே என் வாழ்வு இந்த உலகிற்கும் எனக்கும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும்.
No comments:
Post a Comment