Friday, April 20, 2018

ஏப்ரல் 21: இயேசுவோடே...

அவரோடே வாழ்வோம், அவராகவே வாழ்வோம். 


இன்றைய இறைவார்த்தையில் விஞ்சி நிற்பவர் - பேதுரு! பலரும் இயேசுவை விட்டு விலகி சென்றபோது  ஒரு சிலர் மட்டுமே அவரோடு தங்கினர்... அவர்களில் பேதுருவே தலைவராக நிற்கிறார். கிறிஸ்து கைதாகி துன்புற நேர்ந்தபோதும் கூட, அவரது இயலாமையையும் தாண்டி கிறிஸ்துவோடே இருக்க வேண்டும் என்று துடித்தவர் பேதுரு. அதற்கு இன்று தலையாயதொரு காரணத்தையும் தருகிறார்: யாரிடம் செல்வோம் இறைவா... வாழ்வு தரும் வார்த்தைகள் உம்மிடம் அன்றோ உள்ளன! 

கிறிஸ்துவோடே தங்குதல் என்பது அவரை போல் வாழ்வதற்கான ஒரு அடிப்படை தேவையாகும். அவரை போன்றே அனைத்தையும் செய்தார் பேதுரு... முடமானவரை கண்டு எழுந்து நட என்றதும், தபிதாவை பார்த்து எழுந்திரு என்றதும், கிறிஸ்து செய்த அதே செயல்கள் என்பதை நாம் அறிவோம்...இது அவரால் முடிந்தது ஏனெனில், அவர் இயேசுவோடே வாழ்ந்தார். 

நாமும் இயேசுவோடே வாழும் போது அவரைப்போலவே பிறருக்கு உயிரூட்டுபவர்களாய், ஊக்கமூட்டுபவர்களாய், உடனிருப்பவர்களாய், நன்மை புரிபவர்களாய், கைகொடுப்பவர்களாய், வாழுவோம். நாம் செய்யும் அனைத்தும் அடுத்தவருக்கு வாழ்வளிப்பதாய் மாறும். ஆனால் அவரோடு நாம் இல்லையெனின் நாம் செய்யும் அனைத்தும் நன்மையாகவே இருப்பினும், அது நமது சுயநலத்திற்காகவும், நமது நற்பெயருக்காகவும், நமது பெயர் பரவுவதற்காகவும், நம்மையே நாம் முன்னிறுத்துவதற்காகவும் மட்டுமே பயன்படும்.

நாம் செய்யும் அனைத்திலும், நாம் சிந்திக்கும் அனைத்திலும் நம்மையே நாம் கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி ஒன்று உள்ளது: நான் இயேசுவோடே இருக்கிறேனா?

No comments: