Tuesday, April 24, 2018

ஏப்ரல் 25: வியக்கத்தக்க மனிதர்களாய்

நற்செய்தியாளர் புனித மாற்கு திருவிழா  


இன்று நாம் தியானிக்கும் நற்செய்தி பகுதியை நான் படிக்கும்போதெல்லாம் மறக்க முடியாத நினைவு ஒன்று உண்டு... பல ஆண்டுகளுக்கு முன்னாள் நடந்த ஒரு நிகழ்வு... என் உறவினர்களில் ஒரு சிறுவனுக்கு இன்றைய நற்செய்தி பகுதியை பற்றி விளக்கிக்கொண்டிருந்தேன். நம்பிக்கை கொண்டோரை பற்றி கிறிஸ்து கூறும் பண்புகளை கூறிக்கொண்டிருந்தேன் ... சீரும் பாம்பை கையில் எடுப்பார்கள், நஞ்சை உண்டாலும் அசையாது நிற்பார்கள், பேய்களை ஓட்டுவார்கள்... அவன் சற்று நிமிர்ந்து என்னை பார்த்தான். கண்கள் விரிய ஒரே கேள்வியில் விளக்கத்தை நிறைவு செய்தான்: "அப்படியானால் நாம் எல்லாம் சக்திமானா?" (சக்திமான் - அந்த நாட்களில் தொலைக்காட்சியில் பிரபலமாய் இருந்த குழந்தைகள் தொடர் அது. சிலருக்கு நினைவிருக்க கூடும்.) 

ஆம் அப்படிப்பட்ட சக்திமான்களாய், வியக்கத்தக்க மனிதர்களாய் வாழவே நாம் அழைப்பு பெற்றுள்ளோம். ஏனெனில் நமக்கு அருளப்பட்டிருக்கும் ஆவியோ கோழையுள்ளத்தை கொண்ட ஆவியல்ல, வல்லமையும் அன்பும் கட்டுப்பாடும் கொண்ட ஆவி! நமது வாழ்வை கண்டு இந்த உலகம் வியந்து நிற்க வேண்டும், எள்ளி நகைக்க கூடாது. 

இப்படிப்பட்ட வியக்கத்தக்க குணங்கள் இருப்பினும் தாழ்ச்சியோடும் பணிவோடும் நற்சான்றோடு வாழ நம்மை அழைக்கிறது இன்றைய திருவிழா...ஏனெனில் இப்படிப்பட்ட வியக்கத்தக்க கூட்டத்தில் தான் சிறுவனாய் இளைஞனாய் இருந்த மாற்கு இணைகின்றார்... அவரது திருவிழாவையே நாம் இன்று கொண்டாடுகின்றோம். 

பேதுருவிடமிருந்தும், பவுலிடமிருந்தும் கேட்டறிந்த தரவுகளை வைத்து தனது நற்செய்தியை எழுதும் மாற்குவின் சித்தரிப்பில் கிறிஸ்துவின் உண்மை மனித தன்மை அழகாய் வெளிப்படுகிறது. அன்பும், கனிவும், புரிந்துணர்வும், எளிமையும் நிறைந்த ஒரு கிறிஸ்துவை நாம் இந்நற்செய்தி வழியாய் அறிகின்றோம்... அப்படியே நாமும் நமது வியக்கத்தக்க அழைப்பை உணர்ந்தவர்களாக அதே சமயம் அன்பும் கனிவும் புரிந்துணர்வும் நிறைந்தவர்களாக வாழ முற்படுவோம். 


No comments: