Wednesday, April 4, 2018

உயிர்ப்பின் அழைப்பு: உயிருள்ள வார்த்தைக்கு செவிகொடுங்கள்

ஏப்ரல் 5: பாஸ்கா எண்கிழமையில் வியாழன் 

தாங்கள் யார் என்று அறிந்துகொள்ள அன்று சீடர்களுக்கும் முதல் திருச்சபைக்கும் அடிப்படையாய் இருந்தது இறைவார்த்தையே. நேற்று முதல் உயிர்த்த கிறிஸ்து தன சீடர்களின் மனதை திறந்து இறைவார்த்தையை உணர்ந்திட புரிந்திட நம்பி ஏற்றிட உதவுவதை நாம் காண்கின்றோம். ஏனெனில் தங்கள் வாழ்விலும், தங்களை சுற்றியும் நடப்பவற்றை, அவர்கள் புரிந்துக்கொள்ள இது மட்டுமே வழியாய் இருந்தது. அதை அவர்கள் புரிந்துகொண்ட உடனேயே அவர்களது அடையாளமே முற்றிலுமாய் மாறியது - மனோதிடமும், ஆன்மிக ஆற்றலும், துன்பங்களை தாங்கும் தெம்பும், புத்துணர்வும் புதுவாழ்வும் அவர்களில் மிளிர்ந்தது! இதுவே தெளிவான அடையாளத்தின் சிறப்பாற்றல்!

உயிர்ப்பின் அழைப்பாய் இன்று நமக்கும் இதுவே வந்தடைகின்றது... உயிருள்ள வார்த்தைக்கு செவிகொடுப்போம். வார்த்தை மனிதரானார், அவர்களிடையே வாழ்ந்தார். ஆனால் அவர்கள் அவரை அறிந்துகொள்ளவில்லை. அதே வார்த்தை உயிர்த்து வந்தபோது புதிதாய் அவரை உணர்ந்தார்கள். வாழ்வான வார்த்தை இது, வரலாறு படைத்த வார்த்தை இது, புது வாழ்வும் புத்துணர்வும் அவர்களுக்கு தரக்கூடிய வார்த்தை என்பதை அவர்கள் உணர்ந்தார்கள். அதே வார்த்தை இன்றும் நம்மோடு வாழ்கின்றார், நம்மோடு பேசுகின்றார் என்று உணர நம்மை அழைக்கிறது இந்த நாட்களின் வழிபாடு. விவிலியத்தில், திருவழிபாட்டிலும், நம்மை சுற்றி நடக்கும் நிகழுவுகளிலும் இறைவன் நம்மோடு பேசுகின்றார் என்பதை நாம் உணர்கின்றோமா? செவிகொடுக்கின்றோமா?

உண்மையில் நாம் செவிகொடுத்தோம் என்றால் இறைவார்த்தை நம்மிடம் பல கேள்விகளை எழுப்பும்: நம் ஆழமான அடையாளம் என்ன? வாழும் வார்த்தை விவிலியத்தில், திருவழிபாட்டிலும், சுற்றி நடக்கும் நிகழ்வுகளிலும் உன்னிடம் பேசுவதை நீ அறிந்திருக்கிறாயா? அதை புரிந்துகொள்ள உண்மையில் முயன்றுள்ளாயா? அதையே உன் வாழ்வாக்க நினைத்துள்ளாயா?



No comments: