Friday, April 6, 2018

உயிர்ப்பின் அழைப்பு: பிடிவாதத்திலிருந்து பிடிமானமுள்ள வாழ்க்கைக்கு...

ஏப்ரல் 7: பாஸ்கா எண் கிழமையில் சனி 


இயேசு உயிர்த்து வந்தபோது அவரது சீடர்கள் அவரை அடையாளம் கண்டுகொள்ளவில்லை. அவர்களோடு வாழ்ந்தபோது பல முறை அவர்களுக்கு இது குறித்து இயேசு பேசியிருந்தும், உயிர்த்து வந்த போதும் பல அற்புதங்களையும், புதுமைகளையும் கண்ணார கண்டபோதும், அவர்கள் அவரை அடையாளம் காணமுடியவில்லை... இது கிறிஸ்துவுக்கே ஒரு வகையான கோபத்தை உண்டாக்கியது. அதை அவர்களோடு பகிர்ந்தும் கொள்கிறார், அவர்களை கடிந்துகொள்கிறார்! உண்மையில் அவர் மேல் அவர்கள் எத்தனை அன்பு கொண்டிருந்தார்கள் என்பதை அவர் அறிந்திருந்ததனால், அவர்களை கடிந்துகொள்வதில் அவருக்கு எந்த தயக்கமும் இல்லை. அவ்வாறு அவர் கடிந்துக்கொண்டதும், தூக்கத்திலிருந்து எழுந்த குழந்தைகளை போல தெளிவுபெற்றார்கள். அதன் பின் அவர்களை எந்த ஆற்றலாலும் அசைக்க முடியவில்லை - கைது, தண்டனை, கசையடி, கல்லெறிதல், மிரட்டல் - எந்த எதிர்ப்பும் அவர்களை நிறுத்தவில்லை. 

நம்மையும் ஒவ்வொரு நாளும் உயிர்த்த கிறிஸ்து பலவகையான அழைப்போடும், ஆலோசனைகளோடும், அணுகியவண்ணமே உள்ளார். ஆயினும், நாம் பிடிவாதம் பிடிக்கும் சிறு குழந்தைகளை போலவே, அவற்றை காணவோ, புரிந்துகொள்ளவோ ஏற்று வாழ்வை மாற்றவோ எந்த முயற்சியும் எடுக்காமல் நகர்ந்து செல்கின்றோம்! காணமுடியாமல் அல்ல, காண விரும்பாமல்; மாற்றமுடியாமல் அல்ல, மாற்ற துணியாமல்! நம்மையும் இறைவன் சில நேரங்களில் குரல் உயர்த்தி கண்டிப்பதுண்டு... அவர் நம் மீது வைத்துள்ள நம்பிக்கையின் காரணமாய்.

அவரது குரல் கேட்போம், அவர் நம்மோடு இருப்பதை காண்போம், உளமார உணர்வோம், அவரது விருப்பம் உணர்ந்து அதை வாழ்வில் செயல்படுத்துவோம். அப்போதுதான் நம் வாழ்வும் பிடிமானமுள்ள வாழ்வாக, யாராலும் அசைக்கமுடியாத வாழ்வாக, அர்த்தமுள்ள வாழ்வாக, முழுமைபெற்ற வாழ்வாக உருவெடுக்கும். 

பிடிவாதத்திலிருந்து பிடிமானமுள்ள வாழ்விற்கு மாற நான் தயாரா?



No comments: