Friday, May 11, 2018

மே 12: யாருக்காக?

தந்தையிடமிருந்து, தந்தையாம் அவருக்காகவே!

12th May,  2018: Acts 18: 23-28; Jn 16: 23-28

அப்பொல்லோ, பிரிஸ்கில்லா, அக்கில்லா, பவுல் என அப்போஸ்தலர்கள் அணிவகுத்து நிற்கின்றார்கள் இன்றைய முதல் வாசகத்தில். இவர்கள் அனைவருமே இறைவனின் வார்த்தையையும், கிறிஸ்துவின் வாழ்க்கையையும் அனைத்து மக்களுக்கும் எடுத்துச்செல்ல வேண்டுமென  தங்களையே அற்பணித்து வாழ்ந்து வந்தவர்கள். அவர்களது வாழ்க்கைமுறையிலிருந்து நமக்கு ஒரு உந்துதல் தரப்படுகிறது. நானா நீயா யார் பெரியவர் என்றோ, சேவை புரிவதா பெறுவதா என்றோ, யார் யாருக்கு கற்று தவறுவது என்றோ எந்த 'தன்மையப்படுத்தும்' எண்ணங்கள் எதுவுமின்றி செயல்பட அவர்களால் எப்படி முடிந்தது?

இயேசுவும் நற்செய்தியில் தன்னையும் தன்  தந்தையையும் பற்றி நமக்கு கூறும் போது... அவர்களுக்கு இடையே உள்ள ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் கோடிட்டு காட்டுகிறார். தந்தையிடமிருந்தே வந்தேன்,   தந்தையிடமே திரும்புகிறேன் என்று தன் வாழ்க்கையை  சுருங்கவிளக்கும் அவரது பாணியே அவரது சீடர்களிடமும் காணப்படுகிறது. 

இதையல்லவா பவுல் உண்டாலும் பருகினால் நாம் அவருக்காகவே செய்கிறோம் (1 கொரி 10:31) என்றும், நாம் வாழ்ந்தாலும் இறந்தாலும் அது அவருக்காகவே (உரோமை 14:8) என்றும் தெள்ளத்தெளிவாக எடுத்துக்கூறுகிறார்? இன்று கிறிஸ்தவ குடும்பங்களிலும், துறவற வாழ்விலும், மற்ற குழுக்களிலும், கிறிஸ்தவ சமூகத்திலும் பல பிரச்சனைகளின் அடிப்படை காரணத்தை ஆய்ந்தறிய முற்பட்டோமென்றால், நமக்கு விளங்குவது இந்த உண்மையாய் தான் இருக்கும்: நாம் யாருக்காக,  யாரால், எதற்காக, எதை நோக்கி வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்ற தெளிவு நம்மிடம் இல்லாமல் போய்விடுகின்றது. 

நாம் தந்தையிடமிருந்தே  வந்தோம்,அவருக்காகவே வாழ்கிறோம், அவரை நோக்கியே பயணிக்கிறோம் என்று தெளிந்துவிட்டோமென்றால், தேவையற்ற தேடல்களும், மோதல்களும் அகன்றுவிடும்.                                                                                                                                                                                                  


                                                                                                                                                                                                   

No comments: