Tuesday, May 1, 2018

மே 2: பிரச்சனைகளில் கிறிஸ்துவின் மனநிலை

இணைந்திடாவிடில் கணிதர இயலாது! 

தி. ப. 15:1-6; யோ 15: 1-8

இன்றைய பதிலுரைப்பாடல் நம்மை மகிழ்ச்சியோடு எருசலேம் செல்ல அழைக்கிறது... முதல் வாசகத்தில் இருவர் செல்வதை நாம் காண்கின்றோம் - பவுலும் பர்னபாவும். ஆனால் மகிழ்ச்சியோடு அல்ல... சிறிது பிரச்சனையோடு. பிரச்சனை இங்கு என்னவென்றால், யார் சரி யார் தவறு, யார் பெரியவர் யார் சிறியவர், என்பதல்ல. விசுவாசிகள் மீது தேவைக்குமேல் பாரத்தை சுமத்த கூடாது என்ற எண்ணமே மேலோங்கி நிற்பதை நாம் காணமுடிகின்றது. 

அங்கு இருந்த பிரச்சனை, அதற்கு அவர்கள் கண்ட தீர்வு இவ்விரண்டையும் தாண்டி, அந்த பிரச்னையை அவர்கள் சந்தித்த விதம், நமக்கு பெரும் பாடமாய் உள்ளது. இதுவே கிறிஸ்துவின் மனநிலையோடு பிரச்சனைகளை அணுகும் முறையாகும். இன்று திருச்சபைக்குள்ளே சிறு பிரச்னை என்றாலும், சுவரொட்டிகள், பதாகைகள், மொட்டைக்கடிதங்கள், முகநூலில் அவதூறான பதிவுகள், பெயர் சிதைப்புக்கள் என இறங்கிவிடும் கலாச்சாரத்தில், பொறுமையோடு, ஒரு குடும்பமாய், இறைவனின் உறவில், பிரச்னையை சிந்தித்து பார்த்து, எது சரி என்று சீர்துக்கி பார்த்து, இறைவனுக்கு எது உகந்தது என்பதை மட்டும் மனதில் நிறுத்தி, இறைவனின் மக்களுக்காக முடிவுகள் எடுக்கும் முறை என்பது சற்று பதத்து தான் போய்விட்டது.   

வேறொன்றும் எனக்கு மனதில் வருகிறது... இந்த புரிதலின்மை, தவறான புரிதல்கள், சிறு சண்டைகள் அனைத்துமே எப்படி கையாளப்படுகின்றன? இந்த நாட்களில் நான் நான்கைந்து முகநூல் குழுமங்களிலிருந்து வெளியேறிவிட்டேன்... காரணம், கிறிஸ்தவர்கள் - கத்தோலிக்கர்கள், கத்தோலிக்கரல்லாதவர்கள் என்று ஒருவரை ஒருவர் எதிர்த்து போடும் பதிவுகளும் கருத்துக்களும், சண்டைகளும்... அருவறுக்கத்தக்கதாய் இருக்கின்றன. கலந்தாலோசித்தல், உரையாடல் இவை நல்லது தான். ஆனால் ஒற்றுமை, புரிதல், என்ற இலக்குகளை நோக்கி இருக்கவேண்டும். அடுத்தவரை இழிவு படுத்த, சிறுமை படுத்த, நானே சரி என்று நிரூபிக்க, அடுத்தவரின் மனதை புண்படுத்த, தீர்ப்பிட, குறைகூற... என்ற இவையே இலக்காகும் போது அது உண்மையிலே கிறிஸ்துவின் மனநிலையோடு செய்யப்படுகிறதா என்று கேட்க தோன்றுகின்றது. 

ஒன்றை மட்டும் மனதிற்கொள்வோம்: என்னில் நீங்கள் இணைந்திடாவிடில் கணிகொடுக்க இயலாது. என்னில்  நீங்கள்... இணைந்திடாவிடில்! நாம் கிறிஸ்துவின்  சீடர்களாய் இணைந்திடாவிடில் கணி கொடுக்க இயலாது என்பதை உணர்வோம்... கிறிஸ்துவின் மனநிலையை அணிந்துகொள்வோம்!

No comments: