Monday, May 21, 2018

மே 22: உனக்குள் நடக்கும் யுத்தம்

முடிவுகள் எடுக்கும் போது மேலோங்கி நிற்பது எது? 

யாக். 4: 1-10; மாற் 9: 30-37

இன்று யாக்கோபும் இயேசுவும் நமக்குள் நடக்கும் ஒரு தொடர் யுத்தத்தை குறித்து நம்மிடம் பேசுகிறார்கள். நமக்குள் நடக்கும் இந்த யுத்தமே நம்மை சுற்றி நடக்கும் பல யுத்தங்களை நிர்ணயிக்கின்றது. தன்னலத்தையும் தன்மையப்படுத்துதலையும் முதன்மையாய் கொண்டு இயங்கும் மனநிலையால் வரும் யுத்தம் அது! தவறான முக்கியத்துவங்களினால் எடுக்கப்படும் தவறான முடிவுகளில் பிறக்கும் யுத்தம் அது. 

இன்றைய சமூகத்தின் முக்கியத்துவங்களை அலசினால் நமது வாழ்வின் அவலம் புரியும். தனது மகிழ்ச்சியையும் தன்னிறைவையும் முன்னிறுத்துவதால் ஒருவர் என்ன தவறு செய்கிறார்? அதில் என்ன பெருங்குற்றம் இருக்கிறது?, என்று தெளிவாய் கேட்கிறது இன்றைய உலகம். கடவுள் நமக்கு கொடுத்த கொடைகளை பயன்படுத்தி நாம் வளர்கிறோம், நிறைவு காண்கிறோம் - இது குற்றமா? என்று கேட்கும் உலகம், கடவுள் கொடுத்ததை எல்லாம் எனக்காக மட்டுமா கொடுத்தார்... நான் மகிழ, நான் உயர, நான் நிறைவு பெற மட்டுமே கொடுத்தாரா? என்று கேட்க மறந்துவிடுகிறது! நான் என்ற எண்ணத்திற்கும், தான் என்ற அகந்தைக்கும் உரமிட்டு வளர்த்து தன்னையே உலகம் என்னும் கோவிலின் மூலஸ்தானத்திலே (மையத்தில்) தெய்வமாக்கிக்கொள்கிறது இன்றைய மனிதம். இதைவிட பெரிய உருவ வழிபாடு எது இருக்க முடியும்? உருவவழிபாடு இருக்கக்கூடாது என்று கூக்குரலிடும் பலரும் கூட இன்று தங்களையே தனி மனித வழிபாட்டுக்குரியவர்களாக்கி கொண்டு, தாங்களே கடவுளை ஏலத்திற்கு எடுத்துவிட்டவர்களை போல் பிதற்றும் மடமை இன்று அதிகம் ஆகிக்கொண்டே வருகிறது. 

இன்று இறைவார்த்தை நம்மை கேட்கும் கேள்வி ஒன்று தான்: கடவுளுக்கு கொடுக்க வேண்டிய முதன்மை இடத்தை நான் வேறு ஏதாவது ஒன்றிற்கு தந்திருக்கின்றேனா? என்னை பொறுத்தவரை கடவுளன்றி வேறு யாரும் வேறு எதுவும் முதல் இடத்தை எடுக்க முடியாது என்பதில் நான் உறுதியாய் உள்ளேனா? அப்படி உறுதியாய் இருந்தால், தொடர்ந்து முன்செல்லுங்கள், இந்த உலகம் உங்களை திரும்பி பார்க்கும்!


No comments: