Friday, May 25, 2018

மே 26: குழந்தைகளாய் வளர்வோமா?

இறையரசு குழந்தைகளுக்கே உரியது!

யாக் 5:13-20; மாற் 10:13-16

சிறுபிள்ளைத்தனம் என்று பல நேரங்களில் நாம் குறிப்பிடுவது முதிர்ச்சியற்ற சிந்தனைகளையும் செயல்பாடுகளையுமே. இன்றைய வார்த்தையோ, இதையே இறையரசிற்கு தேவையான மனநிலையாய் நமக்கு முன்னிறுத்துகிறது. முதிர்ச்சியென்பது குழந்தை பருவத்தைவிட்டு வளர்வது எனினும், குழந்தை மனநிலையை விட்டு அகல்வது அல்ல. 

வளர்ந்தவர்கள் என்று தங்களையே அடையாளப் படுத்திக்கொள்ளும் இன்றைய சமுதாயத்தின் மாந்தர்கள் எப்படிப்பட்டவர்களாக இருக்கிறார்கள் - நிர்ணயிக்கப்பட்ட சிந்தனைகள், கணிக்கப்பட்ட தீர்ப்புக்கள், காரணமில்லாத வரையறைகள், உலகம் தங்களை பற்றி என்ன நினைக்கிறது என்பதை முன்னிறுத்தியே செயல்படும் போக்கு, அடுத்தவர் இழைத்த தீங்கினை மறவாது கணக்கு வைத்திருக்கும் பாங்கு, உள்மன அமைதிக்கும் உண்மையான மகிழ்ச்சிக்கும் மேலாக அடுத்தவரின் அபிப்பிராயங்களை உயர்த்தும் சிந்தனை... என மேலோட்டமாகவே வாழும் மாந்தர்களாக இன்றைய மனிதர்கள் வாழ்ந்துவிடுகிறார்கள். 

குழந்தையின் மனநிலை என்பது எதில் அடங்கியுள்ளது: தூய்மையான மனது, இறைவன் மீது குழப்பமில்லா சார்பு, தீர்ப்பிடாத உறவுகள்... இதுவே குழந்தையின் மனநிலை, சிறுபிள்ளையின் வாழ்க்கைமுறை. நாம் வளரும் போது இழந்துவிடும் சில அருமையான குணங்கள் இவை. இவற்றை நாம் தக்கவைத்துக் கொண்டோம் என்றால், என்றும் சிறுபிள்ளைகளாகவே இருப்போம். நாம் சிறுபிள்ளைகளாகாவிடில் இறையரசில் நுழைய மாட்டோம் என்பதை உணர்ந்து தெளிவோம்... நம் அன்றாட வாழ்வில் குழந்தைகளாய் வளர்வோமா?


No comments: