Monday, May 28, 2018

மே 29: தூய்மையுள்ளவர்களாய்...

அவர் தூயவராதலால், நாமும் தூயோராய்.

1 பேதுரு 1:10-16; மாற் 10: 28-31

நாம் அனைவரும் அழைக்கப்பட்டவர்கள்... நாம் தீயினில்  புடமிடப்பட்டவர்களாய் வாழ வேண்டும் ஏனெனில், நாம் அழைக்கப்பட்டவர்கள். நம்மை அழைத்தவர் தூயவராய் இருப்பதனால் நாமும் தூயோராய் வாழ அழைக்கப்பட்டுள்ளோம். தூயோராய் வாழ்வது என்பது ஒரு தேர்வு... நாமாக தெளிந்து தேர்வது. இறைவனை போல் வாழ, அவரது விழுமியங்களுக்கு ஏற்ப வாழ நாமாக தேர்ந்து தெளிவது!

இதை நாமாக தேர்ந்துகொள்ளும் போது நமக்கு கிறிஸ்து பலவற்றை வாக்களிக்கிறார் - நாம் தியாகம் செய்வதை விட நூறு மடங்கு, ஆசீர்வாதம், பிறரிடமிருந்து அன்பு, உறவுகள்... இவற்றோடு இன்னல்களும்கூட... மேலும் மறுமையில் நிலை வாழ்வும்! நமது திருமுழுக்கிலே இந்த அழைப்பை பெற்றுக்கொண்ட நாம், அதே திருமுழுக்கிலே இந்த நிலைவாழ்வையும் பெற்றுக்கொண்டுள்ளோம்! ஆனால், அந்த நிலைவாழ்விற்குள் நாம் படிப்படியாய் வளரவேண்டும். 

நமது அன்றாட வாழ்வு, அதில் நாம் மேற்கொள்ளும் தெரிவுகள், நமது முடிவுகள், நமது முக்கியத்துவங்கள், இவற்றினால் நாம் நமக்கு அளிக்கப்பட்டிருக்கும் நிலைவாழ்விற்குள் படி படியாய் வளரவேண்டும். இதுவே, தூயோராய் வாழ்தல். இறைவனுக்குரியத்தை தேர்ந்துகொள்வதோ, இவ்வுலகத்திற்குரிய மடமையை தேர்ந்துகொள்வதோ, நமது கையில் தான் உள்ளது என்பதை ஆணித்தரமாக கூறுகிறது இன்றைய இறைவார்த்தை... நாம் எதை தேர்ந்துகொள்ளப்போகிறோம்?

அவர் தூயவராதலால், நாமும் தூயோராய் வாழ முடிவெடுப்போம்... சரியான தருணத்தில் சரியான முடிவுகளை எடுத்து அன்றாட வாழ்வில் நாம் தூய்மையுள்ளோராய் வளர்வோம்!

No comments: