Tuesday, May 29, 2018

மே 30: உனது விதை?

உனது வெளிப்பாடுகளே உனது விதையை வெளிப்படுத்தும். 

1 பேதுரு 1: 18-25; மாற் 10: 32-45

ஒரு மரம் அதன் கனிகளிலிருந்து அறியப்படுகிறது என்கிறது இறைவார்த்தை. இன்றைய இறைவார்த்தையும் அப்படிப்பட்ட ஒரு உண்மையை தான் நமக்கு முன்னிறுத்துகிறது. கிறிஸ்து இன்று இரண்டு வகையான மக்களை குறித்து நம்மிடம் பேசுகிறார்... ஒன்று உலகப்பாங்கான ஒரு வகை மக்கள், மற்றொன்று கிறிஸ்துவின் மனநிலையை கொண்ட மக்கள் - இந்த இரண்டாம் வகையினர், கிறிஸ்துவின் இரத்தத்தினாலே பிறந்தவர்கள் என்று முதல் வாசகம் நமக்கு விளக்குகிறது. இவர்களது விதை கிறிஸ்துவின் இரத்தமே!

இந்த இரண்டு வகையினரையும் நமக்கு நினைவுறுத்துகிறார் கிறிஸ்து - ஆட்சியையும் அதிகாரமும்வேண்டுவோர் ஒருவகை, அன்பும் சேவையும் கருதுவோர் மறுவகை; தீர்ப்பிடுதலையும் தங்கள் விருப்பத்தை திணிப்பதையும் விரும்புவோர் ஒருவகை, புரிதலையும் அடுத்தவரின் உணர்வை மதித்தலையும் முன்னிறுத்துவோர் மறுவகை; பிரிவினையும் ஏற்றத்தாழ்வும் பாராட்டுவோர் ஒருவகை, சமத்துவத்தையும் ஒருமைப்பாட்டையும் முன்னெடுப்போர் மறுவகை. 

ஒன்றிற்கு ஒன்று ஒவ்வாதவை இவை. இதில் எந்த மனநிலை எண்ணில் மேலோங்கியுள்ளது என்று சிந்தித்து தெளிய அழைக்கிறது இன்றைய வார்த்தை. இதில் இரண்டாம் வகையினராக தன்  சீடர்கள் இருக்கவேண்டும் என்று விழைகிறார் கிறிஸ்து. அவர்களுக்கு அதை தொடர்ந்து அறிவுறுத்தியும் வருகிறார்... அவர்களோ அதை புரிந்துகொள்வதாய் இல்லை. ஆனால் அவர் தன் நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்க போவதில்லை... தான் மறித்தாவது அவர்கள் அந்த வேறுபாட்டை உணர்ந்துவிட வேண்டும் என்று தொடர்ந்து போராடுகிறார். 

நம்மையும் அதே நிலைபாட்டிற்கே அழைக்கிறார்... கிறிஸ்துவின் மனநிலையை நாம் கொண்டிருக்க வேண்டும் என்றால், அவரது இரத்தத்தினால் பிறந்தவர்களாக நாம் மாறவேண்டும், வளரவேண்டும். அன்பு சகோதரமே... உனது நிலைப்பாடு என்ன? கிறிஸ்துவின் இரத்தமே உனது விதையா?

No comments: