Thursday, May 3, 2018

மே 4: ஆவியும் நாங்களும்

நீ, நான், ஆவியார் மற்றும் அன்பு 

தி.ப. 15: 22-31; யோ 15: 12-17

தூய ஆவியாரும் நாங்களும் தீர்மானித்துள்ளோம்... என்று அப்போஸ்தலர்கள் கூறுகின்ற இன்றைய முதல் வாசகத்தின்  பகுதி  இறைவார்த்தையில் என்னை மிகவும் ஆட்கொண்ட பகுதிகளில் ஒன்றாகும். தூய ஆவியாரை  அவர்கள் உணர்ந்த விதமும் அவரோடு அவர்கள் உறவாடிய விதமும் எவ்வளவு எதார்த்தமாய் இருந்தது என்பது இதில் தெளிவாய் வெளிவருகிறது. இது போன்ற உண்மையான எதார்த்தமான ஆழமான அழுத்தமான உறவு ஒன்றை தூய ஆவியோடு கொண்டிருக்கும் போது அது நமது பேச்சிலும், வழக்கத்திலும், அனைத்து பரிமானங்களிலும் அது வெளிப்படும் என்பது உறுதி. 

தூய ஆவி நம்மை ஆட்கொள்ளும் போது நாம் செய்வது அனைத்திலும், நாம் எடுக்கும் முடிவுகளிலும், நாம் அளிக்கும் முக்கியத்துவங்களிலும் முற்றிலும் முழுமையானதொரு உணர்வை நாம் பெறுவோம். அந்த முழுமையின் ஊற்று அன்பு. ஆவியானவர் அன்பின் ஆவியானவராவார்...ஏனெனில் அவர் கடவுளின் ஆவி, கிறிஸ்துவின் ஆவி, தந்தைக்கும் மகனுக்கும் இடையே உள்ள அன்புறவின் ஆவி... 


இதனால் தான் அப்போஸ்தலர்கள், பிரச்சனைகளை சந்திக்கும் போது, அவற்றை ஒரே திருச்சபையாய்  அலசிய போது, எதையும் விட்டுக்கொடுக்க முன் வந்தனர்... அவர்களது பாரம்பரியம், அவர்களது யூத நம்பிக்கையின் அடையாளம், அனைத்தையும் துறக்க அவர்கள் தயாராய் இருந்தனர்... ஒரே காரணம்: மக்கள் மீதிருந்த அன்பு, சகோதர சகோதரிகள் மீதிருந்த அன்பு, ஆவியின் உறவில் அவர்களில் நிறைந்திருந்த அன்பு. 

கிறிஸ்துவோ தன் வாழ்விலே, சட்டங்களையும், பாரம்பரியங்களையும் மட்டும் அல்ல, தன் உயிரையே அடுத்தவருக்காக கொடுக்க முன்வருவது தான் உண்மை அன்பு என்று எண்பித்தார். நாமும் தூய ஆவியால் நிரப்பப்படும் போது.. நமது சுயநலன்கள், விருப்பு வெறுப்புக்களையெல்லாம் தாண்டி, அன்பினால் மட்டுமே இயக்கப்படுவோம்!

இன்று கிறிஸ்து நமக்கு விடுக்கும் அழைப்பு இதுவே: என் சகோதரனே சகோதரியே, நீ, நான், மற்றும் தூய ஆவியானவர் இணையும் போது அங்கு உண்மை அன்பு பிறக்கிறது! இணைய நீ தயாரா?

No comments: