Monday, May 7, 2018

மே 8: ஆவியார் அனலாவார்!

ஆறுதலாளிக்கும் ஆவி, அனலாய் வரும் ஆவி!

தி.ப. 16: 22-34; யோ 16: 5-11



இன்று காலை பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த போது ஒரு அம்மா தன்  சிறுபிள்ளையை கைபிடித்து ஏறக்குறைய தர தரவென இழுத்து செல்வதை கண்டேன். அழுதுகொண்டே அந்த சிறுவன் தன்னால் முடிந்தவரை போராடிக்கொண்டிருந்தான். எங்கும் காண்கின்ற காட்சிதான்... பள்ளிக்கு செல்லும் காட்சி. தன் தாயோடே இருக்க வேண்டும் என்று விரும்பும் அந்த சிறுவனும் தவறல்ல, படித்து முன்னேற வேண்டும் என துடிக்கும் தாயும் தவறல்ல...இது வாழ்க்கையின் எதார்த்தம்!

தன் சீடர்கள் அடுத்த நிலைக்கு முன்னேறவேண்டுமென துடிக்கிறார் இயேசு. அவர்களோ அவர் பிரிந்து செல்கிறார் என்று வருத்தம் கொள்கின்றனர். முன்னேற அவரே ஒரு திட்டமும் வைத்திருக்கிறார்... ஆவியானவர்! இறைவார்த்தை நம்மை இவ்வாரத்தின் இறுதியில் வரும் பெருவிழாவுக்கு  தயார் செய்ய தொடங்கிவிட்டது. ஆவியாரை சந்திக்க நாம் தயாரா?

தூய ஆவியானவர் வெறும் ஆறுதலின் ஆவியல்ல, அவர் அனலாவார்! சுட்டெரிக்கும் அனல், தூய்மைப்படுத்தும் அனல், புடமிடும் அனல்... அதனால் தான் அவரை சந்தித்த முதல் தருணத்திலேயே, அனைவரும் கேட்கும் முதல் கேள்வி... நான் என்ன செய்ய வேண்டும்? என்னையே மாற்றிக்கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்? மீட்பு பெற நான் என்ன செய்ய வேண்டும்? 

அதே கேள்வியை கேட்க நாமும் தயாராவோமா?... இறைவனுக்கு ஏற்றவனாக, ஏற்றவளாக வளர நான் என்ன செய்ய வேண்டும்: ஆவியே அனலாய் வா... என் வாழ்வு தூய்மைபெற ஒளிசேர்க்க வா!

No comments: