Tuesday, May 8, 2018

மே 9: ஆவியார் ஒளியாவார்

உண்மையை உணர்த்துவார்; அனைத்தையும் அறிவிப்பார்!

தி.ப. 17:15,22 -18:1; யோ 16: 12-15

ஆவியார் அனலாவார் என்று நேற்று நமக்கு எடுத்துரைத்த கிறிஸ்து, அவர் ஒளியாவார் என்று இன்று உணர்த்த விழைகிறார். உண்மையை உணர்த்துபவராக, இறைவனிடமிருந்து அனைத்தையும் நமக்கு அறிவிப்பவராக தூய ஆவியை நமக்கு அறிமுக படுத்துகிறார். ஆம்... நாம் யார், நமது அழைப்பு என்ன, இறைவன் யார், அவரோடு நமக்கு உள்ள உறவு என்ன, இந்த குறிப்பிட்ட நேரத்தில் இறைவன் நம்மிடமிருந்து எதிர்பார்ப்பது என்ன... என்று அனைத்தையும் நமக்கு அறிவுறுத்துபவராக, இறைவனிடமிருந்து பெற்று நமக்கு அறிவிப்பவராக இருக்கிறார் தூய ஆவியார். எனவே, இந்த ஆவியாரின் ஒளியை பெற்ற எவரும் அனைத்தும் அறிந்தவராய் வாழ்வில் தெளிவு பெற்றவராய் இருக்கிறோம்.

உண்மையனைத்தையும் தூய ஆவி நமக்கு உணர்த்தினாலும், நாம் பல வேளைகளில் அதை உணராமலேயே இருக்கிறோம்: ஒன்று, நமது அறியாமையால், அல்லது அறியாமல் இருந்துவிடலாம் என்ற சோதனையால் அல்லது இதை அறிய எனக்கு விருப்பமில்லை என்ற நமது பிடிவாதத்தால். 

அறியாமை இருப்பின், பெரும் தடை இல்லை ஏனெனில் ஒளியாம் ஆவியானவர் வரும்போது அனைத்தும் தெளிவு பெற்றுவிடுகிறது, நமது அறியாமை என்னும் இருள் விலகிவிடுகின்றது. பவுல் மற்றும் பலரை போல அறியாதிருந்தவர்களின் அகக்கண்களை திறந்த ஆவியாரை நாம் இறைவார்த்தையில்  சந்திக்கிறோம்.

அறிந்துகொள்வதால் பல பிரச்சனைகளும் பொறுப்புக்களும் வருகின்றனவே, ஆகையால் அறியாதவண்ணமே இருந்து விடலாமா என்ற ஒரு சோதனை நம்மை மேற்கொள்ள வாய்ப்பு உண்டு! சீடர்களுக்கு அது நேர்ந்தது - காரணம், பயம்! ஆனால் துணிச்சலின் ஆவி, மனதிடத்தின் ஆவி நம்மை மேற்கொள்ளும் போது இந்த சோதனை காலைப்பணியாய் மறைந்துவிடுகிறது. 

எதையும் நான் அறிந்துகொள்ள தயாராக இல்லை என்று முடிவெடுத்து இறைவனின் வார்த்தையை தள்ளி வைக்கும்போது நாம் வேண்டுமென இருளை தேடிச்செல்கிறோம்! ஏதென்சு நகர மக்கள் இதை தான் இன்றைய முதல் வாசகத்தில் செய்கிறார்கள்... இறைவார்த்தை அறிவிக்கப்பட்டபோது, அதை பார்த்து சிரிக்கிறார்கள், ஏற்க மட்டுமல்ல அதை புரிந்துகொள்ளவே மறுக்கிறார்கள்: அவர்களது தற்பெருமை அவர்களை உண்மையை அறிய இயலாது செய்துவிடுகிறது. 

வார்த்தையை கேட்கவும், புரிந்துகொள்ளவும் திறந்த மனதோடு நாம் தூய ஆவியாரை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், உண்மையை இழப்பது நாமே! ஒளியை இழப்பது நாமே! தெளிவை, வாழ்க்கைக்கு வழியை இழப்பது நாமே! 

உணர்வோம், வார்த்தையையும், அதை அறிவிக்கும் இறை ஆவியாரையும் ஏற்க தயாராவோம்!

No comments: