Sunday, June 17, 2018

ஜூன் 18: மறுக்கன்னம் - பொருளென்ன?


பொறுத்துக்கொள்ளுதல், மன்னித்தல், பதிலுக்கு நன்மை செய்தல் 

1 அரசர் 21: 1-16, மத் 5: 38-42


தனது படிப்பினைகளிலேயே மிகவும் நடைமுறைக்கு ஒவ்வாதது எனக்கருதப்படும் படிப்பினையை இன்று கிறிஸ்து நமக்கு தருகிறார். உண்மையிலேயே நாம் கிறிஸ்துவுக்கு உகந்தவர்களா இல்லையா என்று தரம் பிரித்து காட்டுவதே இந்த படிப்பினை தான். ஒருவர் உங்களை கன்னத்தில் அறைந்தால் மறுகன்னத்தை காட்டுங்கள் என்று கூறுகிறார் கிறிஸ்து. காந்தியடிகளுக்கு மிகவும் பிடித்தமான கிறிஸ்துவின் போதனைகளில் ஒன்று இது... இதிலிருந்தே அவரது சத்தியாகிரக போராட்டம் உதித்தது எனின் அது மிகையாகாது. 

முதல் வாசகத்திலே என்றும் இன்றும் நம்மை சூழ்ந்து இருக்கும் தீமையின் ஒரு எடுத்துக்காட்டு நமக்கு தரப்படுகிறது - நில அபகரிப்பு... ஆற்றலும் பணபலமும் உள்ளோர் இன்று வரை எளியோர் மீது தொடுக்கும் தாக்குதல் இது. அதை பற்றி நாம் பேசவேண்டாம்... ஆனால் ஒரு தீமை நமக்கு எதிராய் இழைக்கப்படும் போது நமது நிலை என்னவாக இருக்கிறது என்பதை குறித்து சிந்திக்க நம்மை அழைக்கிறது இன்றைய வார்த்தை. 

கிறிஸ்துவின் மனநிலை கொண்டோர் செய்வது என்ன: மூன்று நிலைகள்... முதல் நிலையில், தங்களுக்கு எதிராய் இழைக்கப்பட்டது அநீதியே என்று உணர்ந்து அதை அநீதி என்று எடுத்துரைத்து பொறுத்துக்கொள்ளும் பண்பு; இரண்டாவது, பொறுத்துக்கொள்வதோடு நின்றுவிடாமல், அநீதி இழைத்தவர்களை மன்னிக்க முன் வந்து அவர்களுக்கு எதிராய் எதையும் செய்யாது விடுவது; மூன்றாம் நிலை, பொறுத்து கொண்டு, அவர்களுக்கு எதிராய் ஏதும் செய்யாதிருப்பதோடு விடாமல், அவர்களுக்கு நம்மால் முடிந்த நன்மையை செய்தல்... "அவர் நாண நன்னயம் செய்துவிடல்".

இது சாத்தியமா என்று கேட்போம் என்பதை உணர்ந்தே கிறிஸ்து இதை வாழ்ந்தும் காட்டினார்... தன் பிள்ளைகள் மீது தனக்குள்ள அன்பை வெளிப்படுத்த எண்ணிய போது இறைவன் தன்  ஒரே பேறான மகனையே அனுப்ப தயாரானார்... மகனோ தனக்கு தீங்கிழைத்தோரை பொறுத்துக்கொண்டதோடு மட்டுமல்லாமல் தன்னை ஏற்றுக்கொள்ளாத மனிதருக்காக தன் அன்பின் அடையாளமாய் உயிரையும் கொடுக்க முன்வந்தார், அவர்களை மீட்டார். 

அந்த கிறிஸ்துவின் உண்மை சீடர்களாய் நாம் இருக்க வேண்டுமென்றால், இழைக்கப்பட்ட தீங்கை பொறுத்துக்கொள்ளவும், தீங்கிழைத்தோரை மன்னிக்கவும், அவர்கள் நலனுக்காக நம்மாலான நன்மை புரியவும் நாம் தயாராகவேண்டும். ஏனெனில் கிறிஸ்துவின் அடிப்படை படிப்பினையே  பவுலடிகளார் கூறுவதை போல், தீமையால் வெல்லப்படாமல் நன்மையால் தீமையை நாம் வெல்லுதல் ஆகும் - இதுவே மறுகன்னம்!

No comments: