Friday, June 22, 2018

ஜூன் 23: நான் யார் பக்கம்?

சுற்றியுள்ள உலகமா? சுட்டிக்காட்டும் உண்மையா?

2 குறிப்பேடு 24: 17-25; மத் 6: 24-34

புறக்கணிப்பு, பாவம், மாற்றுக்கடவுள்களை நாடி செல்லுதல், ஏமாற்றம், புனிதமற்ற வாழ்க்கை, உண்மையான பக்தியற்ற வழிபாடுகள், இறைவனுக்கு செவிகொடாத பிடிவாதம் என இறைவனின் "தேர்ந்துகொள்ளப்பட்ட மக்கள்" அவருக்கு தந்த பதில் பெரும்பாலும் ஏமாற்றம் தரக்கூடியதாகவே இருந்தது. நான் உங்கள் கடவுளாய் இருப்பேன், நீங்கள் என் மக்களாய் இருப்பீர்கள் என்று கடவுள் அவர்களோடு மேற்கொண்ட உடன்படிக்கையை மக்கள் ஒவ்வொரு முறையும் உடைத்தார்கள் எனினும், கடவுள் அவர்கள் மீது வைத்திருந்த அன்பு குறையவே இல்லை, அவரது உடன்படிக்கையை குறித்த நம்பகத்தன்மை எந்த நிலையிலும் மாறவும் இல்லை. இன்றைய முதல் வாசகத்தில் வரும் நிகழ்வை போன்று எத்தனையோ நிகழ்வுகளை காணும்போதெல்லாம், இந்த இஸ்ராயேல் மக்கள் ஏன் இப்படி செய்கிரார்கள் என்று அவர்களை நொந்துக்கொள்ள தோன்றும்... ஆனால் ஒரு வினாடி பொறுங்கள்...

நமது வாழ்க்கையை எண்ணி பார்ப்போமே... இந்த உலகம் தோன்றுவதற்கு முன்பே முன்குறித்து நம்மை தேர்ந்துகொண்டார் இறைவன் (எபே 1:4). நமது திருமுழுக்கின் போது நம்மோடு ஒரு உடன்படிக்கையை மேற்கொண்டுள்ளார்: நீங்கள் என் பிள்ளைகளாய் இருப்பீர்கள், நான் உங்கள் கடவுளாய் இருப்பேன். நமது திருமுழுக்கு முதல், நாம் அவருக்கு முழுமையாக உண்மையுள்ளவர்களாய் வாழ்ந்திருக்கிறோமா? எத்தனை வகையான பாவங்கள், எத்தனை முறை அவருக்கு எதிரானவற்றை தேர்ந்துகொள்ளும் போக்குகள், சாதி, குலம், வர்கம் என்று பிரிவு மனப்பான்மைகளோடு உண்மையாகவே ஒரே இறைவனின் பிள்ளைகள் என்ற மனநிலை அற்றுப்போய் வாழும் நிலை - இவை எல்லாம் இறைவனின் மக்களுக்கு அழகா?

இன்றைய இறைவார்த்தையின் வெளிச்சத்திலே நம் வாழ்வை சற்று சீர்தூக்கி பாப்போம்... நான் யார் பக்கம்? ஊரோடு ஒத்துப்போகும் மனநிலையோடு இந்த உலகத்தின் பக்கமா? உண்மை மட்டுமே என்னை விடுதலையாக்கும் என்று எனக்கு சுட்டிக்காட்டும் ஒரே தாயும் தந்தையுமான கடவுளின் பக்கமா? நான் யார் பக்கம்?

No comments: