Sunday, June 24, 2018

ஜூன் 25: தீர்ப்பிடுதலும் தன்னுணர்வும்

தன்னுணர்வு நிறைந்த உண்மையின் மனநிலை

2 அரசர் 17: 5-8, 13-15, 18; மத் 7: 1-5

தீர்ப்பிடாதீர்கள் தீர்ப்புக்குள்ளாகமாட்டீர்கள். கிறிஸ்துவின் இன்றைய பாடம் இது. அடுத்தவரை தீர்ப்பிடாதிருத்தல் என்பதும் அவர்கள் செய்யும் அனைத்தையும் நியாயப்படுத்துதல் என்பதும் ஒன்றல்ல. இவ்விரண்டிற்கும் இடையே உள்ள வேறுபாட்டை உணர்தலே இறையரசிற்கு உகந்த மனநிலையாகும்- அதையே தன்னுணர்தல் நிறைந்த உண்மையின் மனநிலை என்போம். 

பல நேரங்களில் உண்மையை பேசுதல் என்ற பெயரில் அடுத்தவரை காயப்படுத்துவதும், தன்னிடம் உள்ள குறையை உணராது அடுத்தவரிடமே குறை காண விழைதலும், தன்னை பற்றி யாரும் குறைகூற முடியாத தற்புரிதலை வைத்துக்கொண்டு அனைவரையும் அலட்சியத்தோடு பார்த்தலும் பல விதமான பிரச்சனைகளுக்கும் குழப்பங்களுக்கும் அமைதியற்ற நிலைகளுக்கும் வழிவகுக்கிறது. இவற்றிலிருந்து நாம் விலகி நிற்கவேண்டுமென்றால் நமக்கு தேவையான மனநிலை: தன்னுணர்தல் நிறைந்த மனநிலை. 

அடுத்தவரில் நான் ஒரு குறை கண்டேன் என்றால் முதலில் நான் செய்ய வேண்டியது, அது அவர்களிடம் உள்ள குறையா, நான் காண்பதில் உள்ள குறையா என்று நடுநிலையோடு சிந்திப்பதே. அவர்களிடமே அந்த குறை இருந்தாலும், இந்த நடுநிலை பார்வை என்னிடம் உள்ள குறைகளை எனக்கு நினைவுபடுத்தி, குறையுள்ள அடுத்தவரிடம் உண்மையான இரக்கத்தோடும், மதிப்போடும் உறவுகொள்ளவும் உரையாடவும் எனக்கு கற்றுத் தரும். 

இரண்டாவதாக நான் செய்ய வேண்டியது, என் முற்றத்தை நான் தூய்மைப்படுத்துவது! பிறர் செய்வது போலவே நீங்களும் செய்யாதீர்கள் என்று நாடோடிகளாக இருந்த தன் மக்களுக்கு ஆண்டவர் அறிவுறுத்தினார். இதை தான் பவுலடிகளாரும் உரோமையருக்கு எழுதிய திருமுகத்தில், 'உலகத்தின் போக்கின் படி ஒழுகாதீர்கள்' என்று தெளிவுபடுத்துகிறார். எது சரி, எது இறைவனுக்கு உகந்தது என்பதை உணர்ந்து உண்மையான இரக்கத்தோடு அதை பற்றிக்கொண்டு உண்மையான அன்போடு இறைவழி நடக்க நாம் வழிகாண வேண்டும். 

சுருங்க கூறின், இன்றைய வார்த்தை நம்மை தன்னுணர்வு பெற அழைக்கின்றது, தெளிவுடன் நடைபோட பணிக்கின்றது. நமது ஆண்டவரின் அழைப்பிற்கு செவிமடுப்போம், தன்னுணர்வு நிறைந்த உண்மையின் மக்களாய் வாழ முயற்சிப்போம், முடிவெடுப்போம். இறைவார்த்தையே நம் பாதைக்கு விளக்காகட்டும். 

No comments: