வளர்ச்சியே வாழ்வின் அறிகுறி
2 பேதுரு 1:2-7; மாற் 12:1-12
உண்மையிலே இறைத்தன்மையுடையவரானால், வளர்ந்திடுங்கள் - என்று சவால் விடுகிறார் கிறிஸ்து. வளராவிட்டால் வாழ்வின் அறிகுறியே அற்றுப்போகும்.
தங்கள் கண்முன்பாக நடந்துகொண்டிருந்த அனைத்தையும் கண்டும் இறைவனை அறிந்துகொள்ளாது இருந்தனர் கிறிஸ்துவின் காலத்து மக்கள். அவர்களுக்கு உண்மையை உணர்த்த கிறிஸ்து படாத பாடு படுகிறார் என்றே சொல்லலாம் - அவர்களுக்கு புரியாமலில்லை, அவர்கள் புரிந்துகொள்ள விரும்பவில்லை; அவர்களுக்கு தெரியாமலில்லை அதை உணர்ந்துகொள்ள அவர்களுக்கு மனது இல்லை. இதையே கிறிஸ்து சாடுகிறார்.
அவ்வாறு இல்லாமல் நம் வாழ்விலே இறைத்தன்மை என்பதை புரிந்துகொண்டு வாழ, வளர பேதுரு நமக்கு ஒரு படிநிலை திட்டத்தை வகுத்து கொடுக்கிறார். இந்த திட்டம் எட்டு படிகளை கொண்டுள்ளது - எளிமையானது ஆனால் சவால் மிக்கது; தெளிவாய் புரியக்கூடியது ஆனால் கடினமானது.
முதல் படி நம்பிக்கை - இதுவே இறைவனோடு நமது பயணத்தின் தொடக்கப்புள்ளி. இரண்டாவது, நற்பண்பு - இதன் மூலமே நமக்குள் குடிகொண்டுள்ள நம்பிக்கையை நாம் வெளிக்காட்ட முடியும். மூன்றாவது, அறிவு - இதுவே நம்மிடமிருந்து என்ன எதிர்பார்க்கப்படுகிறது என்பதை நாம் உணர்ந்து செயல்பட நமக்கு உதவுகிறது. நான்காவது, தன்னடக்கம் - நம் விருப்பு வெறுப்புக்கள், ஆசாபாசங்கள் அனைத்தையும் தாண்டி உண்மையையும், சரியானதையும் தேர்ந்துகொள்ள நமக்கு உதவுவது இதுவே. ஐந்தாவது, மனவுறுதி, உண்மையானதையும் சரியானதையும் தேர்ந்துகொள்ளும்போது ஏற்படும் இன்னல்களையும் இடறல்களையும் தாங்கும் ஆற்றலை தருவது இதுவே. ஆறாவது, இறைப்பற்று - இதுவே அனைத்து இன்னல்களையும் பொறுத்துக்கொண்டு சரியானதை இறைவனுக்காக தேர்ந்துகொள்ளும் மனதை நமக்கு தருகிறது. ஏழாவது சகோதர நேயம் - நாம் யாருக்காக யாரோடு பயணிக்கிறோம் என்பதை சாட்சியமாய் வெளிப்படுத்துவது இதுவே. இறுதியாக, அன்பு - நம்மை அழைத்தவரின் இயல்பும், உருவும் இதுவே!
சுருங்கக்கூறின், நமது வாழ்வு என்பது ஒரு பயணம், ஒரு வளர்ச்சி... ஆண்டின் காலங்கள் மாறி உரிய காலத்தில் உரிய மாற்றங்கள் ஏற்படுவதை போல நமது வாழ்விலும் வளர்ச்சி காணப்பட வேண்டும். இல்லையேல் நமது வாழ்வே கேள்விக்குறியாகிவிடும். வாழ்வோம், வளர்வோம்!
No comments:
Post a Comment