Monday, June 4, 2018

ஜூன் 5: காத்திருக்கும் காவல் வீரர்களாய்

கடமை தவறாத காத்திருப்பு, கண்ணிமைக்காத பொறுப்பு 

2 பேதுரு 3:11-15,17-18; மாற் 12:13-17


காத்திருத்தலை குறித்து நமக்கு விளக்குகிறார் பேதுரு. நமது இருப்பிடம் இவ்வுலகு அன்று. நாம் இங்கு வெறும் வழிப்போக்கர்களே. தனது முழுமையான மகிமையில் இறைவன் வெளிப்படும் அந்த தருணத்திற்காக நாம் காத்திருக்கிறோம், என்று கூறுகிறார் பேதுரு. ஆனால் இது எப்படிப்பட்ட காத்திருப்பு? ஏதும் செய்யாது, கண்ணயர்ந்து கிடைக்கும் காத்திருப்பா? கிடையவே கிடையாது; இருக்கவே முடியாது!

சில மாதங்களுக்கு முன்பாக ஒரு காணொளியில் பார்த்த காட்சி ஒன்று நினைவுக்கு வருகிறது. அதில் ஒரு பெரிய கூட்டமாய் நேர்காணலுக்காக காத்திருக்கும் பட்டதாரிகளை காண்போம். பல மணி நேரமாய் காத்திருந்தும் அவர்களில் யாருமே நேர்காணலுக்கு அழைக்கப்படாததை கண்டு அவர்கள் சற்றே பொறுமை இழந்து தங்கள் எரிச்சலையும், ஏமாற்றத்தையும் பல விதங்களில் வெளிப்படுத்துவதையம், அவர்களில் ஒருவர் மட்டும் (கதாநாயகன் என்பதை சொல்லவே வேண்டாம்) பொறுமையோடும், அடுத்திருப்பவரில் அக்கறை உள்ளவராயும், தன் வார்த்தைகளில் கண்ணியமாயும், கனிவோடும், சிரித்த முகத்தோடும் இருப்பதை நம்மால் காணமுடியும். ஒரு நேரத்தில் அவர்களில் ஒருவர் எழுந்து நேர்காணல் முடிந்துவிட்டது என்றும், உரிய நபர் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார் என்றும் அறிவிக்க அனைவரும் திகைத்தவண்ணமாய் காண்பர். அவரோ தான் தான் நேர்காணல் செய்ய வேண்டிய அலுவலர் என்றும் அவர்கள் மத்தியிலே அவர்களை அறியவே அமர்ந்திருந்ததாகவும் கூறுவார். 

இது வெறும் கதை ஏனென்றால் பேதுரு இன்று நமக்கு தரும் பாடத்திற்கு இது அழகானதொரு விளக்கமாகும். ஆம் நாம் காத்திருக்கிறோம்... ஆனால் காத்திருக்கும் இந்த தருணங்கள் மிக அழகானவை, அவசியமானவை. இவற்றை புனிதமாய், அன்பாய், தூய்மையாய், உண்மையாய், நியாயமாய், இறையுணர்வோடு வாழ்வோம் என்கிறார் பேதுரு. அதை தான் கிறிஸ்து, செசாருக்கு உரியதை செசாருக்கும், இறைவனுக்கு உரியதை இறைவனுக்கும் தாருங்கள் என்று கூறுகிறார். அதாவது - என் கடமை என்னவென்று உணர்ந்து அதை அடுத்தவரின் கண்களுக்காக அல்ல, எனது வாழ்வை முழுமையாய் வாழ்ந்திட, உண்மையாய் வாழ்ந்திட, தூய்மையாய் வாழ்ந்திட நான் செய்து முடிக்கும் போது, நான் காத்திருந்தாலும் தயாராய் இருக்கிறேன்!

காத்திருக்கும் காவலர்கள் கண்ணயர முடியுமா? சற்று கண்ணயர்ந்து விட்டால் காத்திருந்ததற்கே பொருளில்லாமல் போய்விடும் அல்லவா? நமது கிறிஸ்தவ வாழ்வும் அப்படியே அமைத்தல் வேண்டும். கடமை தவறாத காத்திருப்பு, கண்ணிமைக்காத பொறுப்பு... இதுவே நம்மை காத்திருக்கும் காவல் வீரர்களாக்கும், கிறிஸ்துவின் உண்மை சீடர்களாக்கும். 

No comments: